ஐஎஸ் இலக்கு மீது ஃப்ரான்ஸ் விமானத் தாக்குதல்

ரஃபேல் விமானங்களின் மூலம் ஐஎஸ் இலக்கு மீது முதல் தாக்குதலை நடத்தியுள்ளது ஃப்ரான்ஸ்.

ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஃப்ரான்ஸ் நாட்டுப் போர் விமானங்கள் முதல் தாக்குதலை நடத்தியிருப்பதாக அதிபர் ஃப்ரான்ஸ்வா ஒல்லாந்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஈராக்கின் வட கிழக்குப் பகுதியில் இருந்த ஐஎஸ் பாசறை ஒன்றின் மீது விமானங்கள் தாக்குலை நடத்தியதாகவும் வரும் நாட்களில் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் அதிபர் அலுவலகம் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாத மத்தியில் அமெரிக்கா ஐஎஸ் இயக்கத்தினர் மீது 170க்கும் மேற்பட்ட தடவைகள் விமானத் தாக்குதல்களை நடத்தியது.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் பல நகரங்களும் சிறுநகரங்களும் இருக்கின்றன.

விமானத் தாக்குதல் நடத்தும்படி ஈராக் அரசு கோரியதற்கு தான் ஒப்புக்கொண்டிருப்பதாக அதிபர் ஒல்லாந்த் நேற்று தெரிவித்திருந்த நிலையில், வெள்ளிக் கிழமையன்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இருந்தபோதும் ஈராக்கில் இருக்கும் ஐஎஸ் இயக்கத்தினர் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்படும் எனவும் சிரியா மீது தாக்குதல் நடத்தப்படாது எனவும் ஒல்லாந்த் தெரிவித்துள்ளார்.

தரைப்படையினரை அங்கு அனுப்பப்போவதில்லை என்றும் ஒல்லாந்த் தெரிவித்துள்ளார்.

ஈராக் மீது ஃப்ரான்ஸ் ஏற்கனவே கண்காணிப்பு விமானங்களை அனுப்பி வேவு பார்த்திருந்தது. வடபகுதியிலிருக்கும் குர்திஷ் போராளிகளுக்கு ஆயுதங்களையும் வழங்கியது.

ஃப்ரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் “இலக்கு சரியாகத் தாக்கப்பட்டு, முழுமையாக அழிக்கப்பட்டதாகவும்” அதிபரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தாக்கப்பட்ட பாசறை சரியாக எந்த இடத்தில் இருந்தது, அதில் என்ன வைக்கப்பட்டிருந்த்து என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இருந்தபோதும், ஜுமர் நகரத்தின் மீது நான்கு பிரெஞ்சு விமானங்கள் தாக்குதலை நடத்தியதாகவும் பத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ஈராக்கிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் காசிம் அல் மௌஸவி தெரிவித்துள்ளார் என ஏபி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

திங்கட்கிழமையன்று இந்தப் பிரச்சனை தொடர்பாக சர்வதேச கருத்தரங்கம் ஒன்றை ஃபிரான்ஸ் நடத்தியது.

இதில் கலந்துகொண்ட 26 நாடுகள் ஐஎஸ் குழுவுக்கு எதிரான ஈராக் அரசின் நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தன.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஆதரவாக பிரிட்டனும் கண்காணிப்பு விமானங்களை அனுப்பியிருந்தது.

ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் சிரியாவின் மிதவாத கலகப் படையினருக்கு ஆயுதங்களை அளித்துப், பயிற்சியளிக்கலாம் என்ற அதிபர் ஒபாமாவின் திட்டத்திற்கு வியாழக் கிழமையன்று அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்தது.

விரைவில் சிரியா மீது அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதும், இரு நாடுகளுக்கும் தரைப்படைகளை அனுப்பப்போவதில்லையென ஒபாமா கூறியுள்ளார். -BBC