பொதுக் கணக்குக் குழு ஏழு அமைச்சுக்களையும் துறைகளையும் விசாரிக்கும்

பொதுக் கணக்குக் குழு ஏழு அமைச்சுக்களையும் துறைகளையும் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வுத்துறையின் அறிக்கையை மூன்று மணி நேரத்திற்கு மேல் இன்று அந்தக் குழு பரிசீலித்த பின்னர் அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு, எரிசக்தி பசுமைத் தொழில்நுட்ப நீர் வள அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, அரச சுங்க வருமானத்துறை, உள்நாட்டு வருமான வரி வாரியம், ஸ்டேடியம் நெகாரா கார்ப்பரேஷன், அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சு ஆகியவை விசாரிக்கப்படவிருக்கும் அரசாங்க அமைப்புக்களாகும்.

அந்த விவரங்களை பொதுக் கணக்குக் குழுத் தலைவர் அஸ்மி காலித் அறிவித்தார். தங்களது நிதி நிலையில் காணப்படும் பலவீனங்கள் தொடர்பில் அவை குழு முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்படும் என அவர் சொன்னார். அழைக்கப்படும் அமைப்புக்கள் பட்டியல் அடுத்த வாரம் இறுதி முடிவு செய்யப்படும்.

பொதுக் கணக்குக் குழு கூடிய பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார். அந்தக் கூட்டத்தில் தலைமைக் கணக்காய்வாளர் அம்பிரின் புவாங் விளக்கமளித்தார்.