அமெரிக்கப் படைகள், கூட்டாளி அரபு நாடுகளின் பங்கேற்புடன் சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ எஸ்) ஆயுததாரிகளுக்கு எதிராக 14 இடங்களில் விமான குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவ தலைமைக் கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது.
சிரியாவின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இஸ்லாமிய அரசு இயக்கத்தின் பயிற்சி வளாகங்கள், கட்டுப்பாட்டு மையங்கள், வாகனங்கள், சேமிப்புக்கூடங்கள் போன்றவை இத்தாக்குதலில் அழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன என்று அது தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய அரசு இயக்கத்தினரின் தலைமையகம் அமைந்துள்ள சிரியாவின் வடகிழக்கிலுள்ள ரக்காவின் இலக்குகளும் தாக்குதலுக்குள்ளானதாக தகவல்கள் கூறுகின்றன.
இத்தாக்குதல்களில் குறைந்தது 20 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனிலிருந்து செயல்படுகின்ற சிரியா நிலவர கண்காணிப்புக் குழு கூறுகிறது.
மேற்குலக நலன்களுக்கு எதிராக விரைவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுக்கொண்டிருந்த அல்கைதா மூத்த உறுப்பினர்களின் வலையமைப்பு மீதும் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டின் கட்டுப்பாட்டுத் தலலமையகம் தெரிவித்துள்ளது. -BBC
அமெரிக்கக் கூட்டு நாடுகளின் பிரஜைகளுக்கு ஐஎஸ் எச்சரிக்கை
இராக்கில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) ஆயுதக் குழுவின் நிலைகள் மீது அமெரிக்காவும் பிரான்ஸும் விமானத் தாக்குதல்களை நடத்தத்தொடங்கிய பின்னர், அந்த இயக்கத்தின் பேச்சாளர் ஒருவர் முதற்தடவையாக உரையொன்றை ஆற்றி வெளியிட்டுள்ளார்.
தமக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான அணியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நாடுகளின் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் ஐஎஸ் பேச்சாளர் அபு முஹமட் அல் அத்னானி அச்சுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா தரைவழிப் போர் ஒன்றுக்கு இழுக்கப்படும் என்றும் அதிபர் ஒபாமாவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐஎஸ் இயக்கத்தினர் இராக்கிலும் சிரியாவிலும் கணிசமான அளவு நிலப்பகுதிகளை கைப்பற்றிவைத்துள்ளனர்.
அமெரிக்காவும் அதன் மேற்குல கூட்டாளி நாடுகளும் ஐஎஸ் இயக்கத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக, அரபுலக நாடுகளையும் உள்வாங்கிக் கொண்டு, பரந்துபட்ட சர்வதேச நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக முயன்றுவரும் வேளையில் இந்த உரை வெளியாகியுள்ளது.
அரபுமொழியில் பேசப்பட்ட இந்த உரைக்கு ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் ஹீப்ருவிலும் மொழிபெயர்ப்புக் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -BBC
கேக்க மகிழ்ச்சியா இருக்கு ,இவனுங்கள ஒழித்தே கட்ட வேண்டும் ,,வாழ்க அமெரிக்கா