அமெரிக்க ஆதரவு நாடுகள் தரைப்படை தாக்குதலுக்கு ஈராக் பிரதமர் எதிர்ப்பு

அமெரிக்க ஆதரவு நாடுகள் தரைப்படை தாக்குதலுக்கு ஈராக் பிரதமர் எதிர்ப்பு

பாக்தாத், செப். 23- ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அதற்கு இஸ்லாமிய தேசம் என்று பெயரிட்டு செயல்பட்டு வருகிறார்கள். இவர்களின் தொடர் தாக்குதல்களினால் நூற்றுக்கணக்கானோர் பலியாக ஏராளமானோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற நேர்ந்தது.

பலவீனமான உள்ளூர் அரசாங்கத்தினால் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா இந்தத் தீவிரவாத இயக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ஏவுகணைத் தாக்குதல்களைத் துவங்கியுள்ளது. இதற்கு 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் ஒத்துழைப்பையும் அந்நாட்டு அரசு பெற்றுள்ளது.

ஆனால், அந்நிய நாட்டுத் தரைப்படை ஈராக்கில் செயல்படுவதை பிரதமர் ஹைதர் அல் அபாதி எதிர்ப்பதாக அவரது அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் டேவிட் ஜான்ஸ்டனுடன் சமீபத்தில் பாக்தாத்தில் நடைபெற்ற சந்திப்பிலும் தனது இந்தக் கருத்தினை ஈராக் பிரதமர் உறுதி செய்துள்ளார்.

அமெரிக்காவும், பிரான்சும் இணைந்து ஐஎஸ் போராளிகள் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை ஈராக்கில் மேற்கொண்டன. இந்தத் தாக்குதல் சிரியாவிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தரைப்படைத் தாக்குதல்களை நடத்தும் திட்டம் தங்ககளுக்கு இல்லை என்றே அமெரிக்கா தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு ஈராக்கில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் தலையிட்ட அமெரிக்க துருப்புகள் அதிக பொருட்செலவிலான ரத்தம் நிறைந்த யுத்தத்தை எதிர்கொள்ள நேர்ந்தது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் முதல் ஈராக் ராணுவ அதிகாரிகளுக்கான ஆலோசனைகளை அளிக்கும் பொருட்டே நூற்றுக்கணக்கான அமெரிக்க துருப்புகள் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளன என்றும் சுயாட்சி நடைபெறும் குர்திஷ் பகுதியிலிருந்து போர் விமானங்கள் செலுத்தப்படக்கூடும் என்றும் அமெரிக்க ராணுவ மையமான பென்டகன் தெரிவித்துள்ளது.