ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன

isis_001வாஷிங்டன், செப்.28- உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்கா அலறுகிறது. அந்த அளவுக்கு அந்த இயக்கம், கொடூர இயக்கமாக உருவெடுத்துள்ளது.

ஈராக், சிரியாவில் உள்ள ஷியா முஸ்லிம் அரசுகளுக்கு எதிராக இஸ்லாமிய அரசு ஒன்றை பிரகடனம் செய்து, தன் ஆதிக்கக்கொடியை அந்த இயக்கம் நாட்டி வருகிறது. தனது சக சன்னி முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும், குர்து இன மக்களுக்கும் கூட இந்த இயக்கம் சிம்ம சொப்பனமாக திகழ்கிறது.

ஈராக்கில் இந்த தீவிரவாதிகளை எதிர்த்து அமெரிக்கா மட்டும் வான்தாக்குதல்களை நடத்தி வந்தது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தனது போரில் உலக நாடுகள் ஒன்று திரண்டு கை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அழைப்பு விடுத்தார்.

அதையடுத்து பிரான்சு இதில் இணைந்து கொண்டது. அமெரிக்காவுடன் இணைந்து ஈராக்கில் பிரான்சு போர் விமானங்கள் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. தனது நாட்டை சேர்ந்த சுற்றுலாப்பயணி, இந்த ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவு பெற்ற கலீபா வீரர்களால் அல்ஜீரியாவில் கொல்லப்பட்டதை அடுத்து அது ஈராக்கில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஈராக்கில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இங்கிலாந்து களத்தில் நேரடியாக குதிக்கிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்து இணைந்து செயல்படுவதற்கு அந்த நாட்டு பாராளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான பிரதமர் டேவிட் கேமரூனின் தீர்மானம் 542 உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது. 43 பேர் மட்டுமே எதிர்த்து வாக்கு அளித்தனர்.

இதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்திலும், அந்த நாட்டு பாராளுமன்றம் இந்த போரில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட ஒப்புதல் அளித்தது. ஓட்டெடுப்புக்கு முன்பாகவே பெல்ஜியத்தின் எப்-16 ரக போர் விமானங்கள் 6, கிரேக்கத்துக்கு போய் நிலை கொண்டுள்ளன.

இன்னொரு ஐரோப்பிய நாடான டென்மார்க்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளது. இந்த நாடும் போர் விமானங்களை அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க தாக்குதலில் அரபு கூட்டாளிகள் களம் இறங்கியுள்ள நிலையில், இப்போது ஈராக்கில் தாக்குதல் நடத்துவதற்கும் மேற்கத்திய நாடுகள் அணி சேர்ந்து இருப்பது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையிலும் சிரிய எல்லையில் உள்ள நகரின் மீதான தனது பிடியை ஐ.எஸ். தீவிரவாதிகள் இறுக்கி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.