இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இலக்குகள் மீது பிரிட்டன் படைகள் தாக்குதல் நிகழ்த்த அந்நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.
இதையடுத்து, பிரிட்டன் விமானப் படை விமானங்கள் தாக்குதலுக்குத் தாயாராகி வருகின்றன.
கிழக்கு மத்திய தரைக்கடலிலுள்ள சைப்ரஸ் தீவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரிட்டனின் “டோர்னடோ ஜி4′ ரகத்தைச் சேர்ந்த 6 குண்டு வீச்சு விமானங்கள் இதுவரை உளவுப் பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு வந்தன.
இனி அந்த விமானங்கள், ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்களில் ஈடுபடுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கூறுகையில், “”மிக மோசமான பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ûஸ அழிக்கும் பணியில், பிரிட்டனும் பங்கேற்கும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, இராக்கில் தாக்குதல் நிகழ்த்துவது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், தாக்குதலுக்கு ஆதரவாக முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்களித்தன. தாக்குதலுக்கு ஆதரவாக 524 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் பதிவாயின.
இராக்கில் மேற்கொள்ளவிருக்கும் தாக்குதல் நடவடிக்கை குறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப் ஹம்மாண்ட் கூறுகையில், “”தாக்குதல் நிகழ்த்த வேண்டிய இலக்குகளை நிர்ணயம் செய்வது குறித்து நட்பு நாடுகளுடன் ஆலோசித்து வருகிறோம்.
குண்டுவீச்சுப் பகுதிகளிலிருந்து எங்களது விமானங்கள் மிகக் குறைவான சவாலையே எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே, இராக்கில் தாக்குதல் நிகழ்த்த வேண்டிய இடங்களைக் கண்டறிவதற்காக பிரிட்டன் விமானங்கள் ஆறு வாரங்களாக அப்பகுதியில் உளவுப் பணியில் ஈடுபட்டு வந்தன.
போர் விமானங்கள் மட்டுமின்றி, இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக் கூடிய “டாமஹாக்’ ரக ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நிகழ்த்தவும் பிரிட்டன் கடற்படை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, அமெரிக்க, அரபு நாடுகளின் கூட்டுப் படைகள் இராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாத நிலைகள் மீது குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், தற்போது பிரிட்டனும் அவர்களுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.