- ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அஷ்ரஃப் கானி, வெளிநாட்டு ஆயுததாரிகள் ஆப்கானிஸ்தானுக்குத் தேவையில்லை என்று கூறி, இஸ்லாமிய அரசு ஜிகாதி குழுவின் அச்சுறுத்தல் தம் நாட்டுக்கும் பரவுவதாக எச்சரித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் கையொப்பமாகி எட்டு நாட்கள் கழித்து தனது பதவியேற்றுள்ள கானி, தாலிபான்களும் பிற ஆயுததாரிகளும் ஆயுதங்களைக் களைந்துவிட்டு அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் இந்த பதவியேற்பு வைபவம் நடந்த அதேநேரத்தில் உயிர்ப்பலிகளை ஏற்ப்படுத்திய இரண்டு குண்டுவெடிப்புகளும் நடந்துள்ளன.
காபுல் விமான நிலையம் அருகே நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டுள்ளதாகவும், தவிர நாட்டின் கிழக்கிலுள்ள பக்தியா மாகாணத்தில் அரசு கட்டிடங்கள் அருகே நடந்ததாகத் தெரிவிக்கப்படும் பெரிய தாக்குதல் ஒன்றிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது..
கானி அதிபர் தேர்தலில் தோற்கடித்திருந்த அப்துல்லா அப்துல்லாவும் தலைமை நிர்வாகி என்ற புதிய பதவியை தற்போது பெற்றுள்ளார்.
இருவரும் ஒரே அணியாக செயல்படப்போவதாக அதிபர் அஷ்ரஃப் கானி தெரிவித்துள்ளார். -BBC