தேர்தல் மோசடி: ஆனால் டாக்டர் மகாதீர் அவர்களே, நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை

மகாதீர் அவர்களே, தாங்கள் தோல்வி செய்வதை உறுதி செய்ய எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வேலை செய்தன. அது உங்களுக்குத் தெரியும். என்றாலும் அவை அவ்வாறு செய்வதற்கு நீங்கள் அனுமதித்தீர்கள். நல்ல நியாயம் தான்.”

 

மகாதீர்:  தில்லுமுல்லுகளில் எதிர்க்கட்சிகளும் சம்பந்தப்பட்டுள்ளன

பென் கோர்: “என்னுடைய காலத்தில் எதிர்க்கட்சிகள் கூட அத்தகைய தந்திரங்களில்  ஈடுபட்டுள்ளன. ஒரு சமயத்தில் ஒரு வீட்டில் 50 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருந்தனர். அந்தத் தொகுதிக்குள் அந்த வாக்காளர்களை அவர்கள் எப்படி பதிவு செய்ய முடிந்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை”, என டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

அந்தக் குளறுபடி நிகழ்வதற்கு அனுமதித்தது யார்? அது எதிர்க்கட்சிகளின் தவறா ? அல்லது தேசியப் பதிவுத் துறையின் தவறா ? அல்லது தேர்தல் ஆணையத்தின் குளறுபடியா ?

டாக்டர் மகாதீர் அவர்களே, உங்களுக்கு அது தெரியும். ஆனால் ஒன்றுமே செய்யவில்லை. அந்த மோசடி குறித்து ஒரு கண்ணை மூடிக் கொண்டதற்காக நாட்டுத் தலைவர் என்ற முறையில் உங்கள் மீதே பழி போட வேண்டும்.

கேகன்: தேர்தல் மோசடிகளில் ஈடுபடுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வழியே இல்லை. ஏனெனில் தேர்தல் ஆணையம்,  தேசியப் பதிவுத் துறை போன்ற அனைத்து அரசாங்க எந்திரங்களும் பிஎன் கட்டுக்குள் உள்ளன.

ஒரு வீட்டில் 50 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனரா ? யார் அதனை அனுமதித்தது ? ஒரே முகவரிக்குள் எதிர்க்கட்சி ஆதரவு ஆவி வாக்காளர்களை இணைப்பதற்கு தங்களை அனுமதிக்குமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் மடக்கினவா ?

அத்தகைய குளறுபடிகள் ஏதும் இருந்தால் அவை பிஎன்னுக்கு நன்மையளிக்கும் வகையில் தேர்தல் ஆணைய, தேசியப் பதிவுத் துறை தில்லுமுல்லுகளாகவே இருக்கும்.

குவினோபாண்ட்: உங்கள் காலத்தில் அது எதிர்க்கட்சிகள் செய்த தவறா அது ? அப்படி என்றால் ஒரே முகவரியில் 50 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட அனுமதித்தன் மூலம் சட்டத்தை அமலாக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது. உங்கள் அரசாங்கம் அன்று செய்த தவறுகளே இன்று வரை  தொடருகின்றன.

எதிர்க்கட்சிகள் மீது நீங்கள் ஒரு விரலைக் காட்டும் போது நான்கு விரல்கள் உங்களைக் காட்டுவதை மறக்க வேண்டாம். பிஎன் நீண்ட காலமாகவே அதனைச் செய்து வருகிறது என்பதையே அது உணர்த்துகிறது.

பிஎன்-ஆக இருந்தாலும் சரி, பக்காத்தான் ராக்யாட்டாக இருந்தாலும் சரி நியாய சிந்தனை கொண்ட எந்த மலேசியரும் தேர்தல் மோசடியை ஏற்றுக் கொள்ள மாட்டார்.  நேர்மையாக வெற்றி பெறும் ஒருவரே நாடாளுமன்றத்தில் அமைச்சரவையில் மாநிலச் சட்டமன்றத்தில் மாநில ஆட்சி மன்றத்தில் இடம் பெறுவது நியாயமாகும்.

ஆகவே மற்றவர் மீது பழி போடுவதைத் தவிர்த்து மூத்த அரசியல்வாதி என்னும் முறையில் தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்கு அவர் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

திசியா: “தேர்தல்களின் போது எதிர்க்கட்சிகளும் தில்லுமுல்லு செய்துள்ளன” என மகாதீர்  சொல்வதிலிருந்து பிஎன் அரசாங்கமும் நீண்ட காலமாக அவ்வாறு செய்து வருவதை உணர்த்துகிறது.

பிஎன் அரசுக்கு தேர்தல் ஆணையத்தின் ஆதரவு இருப்பதால் கடந்த 50 ஆண்டுகளாக பிஎன் அந்த தில்லுமுல்லுகளில் ஈடுபட்டு வருவது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

அஜிஸி கான்: தாங்கள் தோல்வி செய்வதை உறுதி செய்ய எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வேலை செய்தன.  நல்ல நியாயம் தான்

ஏமாந்தவன்: “சில மாநிலங்களில் கூட எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன,” என்றார் மகாதீர். 

மோசடி இல்லாதிருந்தால் இன்னும் அதிகமான மாநிலங்களை எதிர்க்கட்சிகள் வென்றிருக்கக் கூடும். எதிர்க்கட்சிகளும் மோசடி செய்தன எனக் கூறியதின் மூலம் பிஎன் மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்ட உங்களுக்கு நன்றி. தேர்தலில் பிஎன்னும் எதிர்க்கட்சிகளும் மோசடியில் ஈடுபட்டன என நீங்கள் சொல்கின்றீர்கள்.

ஆனால் பிஎன் அளவுக்கு மோசடி செய்யும் வலிமை எதிர்க்கட்சிகளுக்கு இருப்பதாக நாங்கள் நம்பவில்லை. அரசாங்கத் துறைகள் அனைத்தும் பின்னுக்குப் பக்கபலமாக இருக்கும் வேளையில் எதிர்க்கட்சிகள் மோசடி செய்வதற்கு வழியே இல்லை.