மற்றுமொரு பிரித்தானியரின் தலை துண்டிப்பு: ஐ.எஸ்.ஐ.எஸ் வெறிச்செயல்

alan_henning_001ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய ராஜ்ஜியத்தை ஏற்படுத்தியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் அமெரிக்கா தலைமையிலான நாடுகளுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அந்த நாடுகளின் பிரஜைகளின் தலையை துண்டித்து அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் எச்சரித்து வருகின்றனர்.

அண்மையில் அமெரிக்க பத்திரிகை நிருபர்கள் இருவரையும், பிரித்தானிய தொண்டு நிறுவன சமூக சேவகர் ஒருவரையும் தீவிரவாதிகள் தலை துண்டித்து கொலை செய்திருந்தனர்.

இந்நிலையில் மற்றுமொரு பிரித்தானிய பிரஜையின் தலையை துண்டித்த தீவிரவாதிகள், அதன் காணொளியையும் வெளியிட்டுள்ளனர்.

அந்தக் காணொளியில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நடத்தும் குண்டுத்தாக்குதலால் எமது மக்கள் மரணமடைகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்கர்களின் தலைகள் உருளும் என தீவிரவாதி ஒருவன் எச்சரித்துள்ளார்.

வடமேற்கு பிரித்தானியாவின் மான்செஸ்ட்டர் பகுதியைச் சேர்ந்த ஆலன் ஹென்னிங் சிரியாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கு வழிகாட்டியாக சென்ற போது 10 மாதங்களுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகளின் வெறிச்செயலுக்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மற்றவர்களுக்கு உதவி செய்யப்போன ஆலன் ஹென்னிங்கை கடத்திச் சென்று கொன்றதில் இருந்து இந்த தீவிரவாதிகள் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமானவர்கள்? என்பது தெளிவாகின்றது. இவர்களை வேட்டையாடி, நீதியின் முன்பு நிறுத்துவதற்கு தேவையான அனைத்தையும் செய்வோம் என்று அறிவித்துள்ளார்.