தென் சீனக்கடல் விவகாரம்: சொந்தம் கொண்டாடும் சீனா

south_china_isaland_001சீனாவின் எல்லைப் பகுதிகளில் ஒன்றான தென் சீனக் கடலிலுள்ள பல சிறிய தீவுகளுக்கும், திட்டுகளுக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது.

பல வளங்களையும் கொண்டுள்ள இந்தத் தீவுகளுக்கு பிலிப்பைன்ஸ் உட்பட பல தெற்காசிய நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.

இந்த தீவுப் பகுதிகளில் ஆண்டுதோறும் 5 டிரில்லியன் டொலர் வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் தங்களுக்கான உரிமம் குறித்து பிலிப்பைன்ஸ், சென்ற வருடம் திஹேக் நகரில் உள்ள ஐ.நா. தீர்ப்பாய நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் பங்கு கொள்ள சீனா மறுத்து விட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த வருட இறுதியில் வெளிவர உள்ளது.

இந்நிலையில், அந்தத் தீவுப் பகுதிகளில் ஒன்றான ஸ்ப்ராட்லி தீவுப் பகுதியில் உள்ள தங்களின் விமான ஓடுபாதையின் பழுது பார்க்கும் பணி உட்பட பல வளர்ச்சித் திட்டங்களையும் பிலிப்பைன்ஸ் நிறுத்தியுள்ளது.

பிலிப்பைன்சின் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, அந்நாட்டு ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் வோல்டைர் கஸ்மின் தெரிவித்தார்.

இந்த வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி இருப்பு அரசிடம் இருக்கும்போதும் தாங்கள் தொடுத்துள்ள வழக்கின் காரணமாக தார்மீக உயர்பண்புகள் மதிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டதாக கஸ்மின் கூறினார்.

பிலிப்பைன்ஸ் தவிர இந்தத் தீவுப் பகுதிகளில் தாய்வான் புதிய துறைமுகம் ஒன்றை நிர்மாணித்து வருகின்றது. மலேசியாவும், வியட்நாமும் அந்தப் பகுதிகளில் தங்களுக்கான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

பிலிப்பைன்ஸ் ராணுவமும் வான் மற்றும் கடல் வசதிகளுக்கான விடுதிகள், கலங்கரை விளக்கங்கள் மற்றும் ராடார் நிலையங்களையும் அந்தப் பகுதியில் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கு முன்மொழிந்துள்ளது. ஆனால், தீர்ப்பை எதிர்நோக்கி இந்தத் திட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதோடு, மற்ற நாடுகளையும் தங்களின் பணிகளை நிறுத்துமாறு பிலிப்பைன்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.