சிரியாவில் முக்கியத்துவம் வாய்ந்த மலைக்குன்று ஒன்றைக் கைப்பற்ற ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை குர்துப் படையினர் திங்கள்கிழமை முறியடித்தனர்.
இதுகுறித்து சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் (எஸ்.ஓ.ஹெச்.ஆர்.) இயக்குநர் ராமி அப்துல் ரஹ்மான் கூறியதாவது:
ஐ.எஸ். பாணியைப் பின்பற்றி கோபானே நகருக்கு அருகிலிருந்த ஐ.எஸ். நிலை ஒன்றின் மீது குர்து பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து, கோபானே நகர எல்லையில் முக்கியத்துவம் வாய்ந்த மலைக்குன்றைக் கைப்பற்றும் நோக்கில், கிழக்கு, மேற்கு திசைகளிலிருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருமுனைத் தாக்குதல் நிகழ்த்தினர்.
இரவு முழுவதும் தொடர்ந்த இந்தத் தாக்குதலை குர்துப் படையினர் முறியடித்தனர் என்றார் அப்துல் ரஹ்மான்.
குர்துக்கள் வசமுள்ள கோபானே நகரைக் கைப்பற்ற, ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த மூன்று வாரங்களாக முயன்று வருகின்றனர்.
அந்நகரைக் கைப்பற்றுவதன் மூலம், சிரியா-துருக்கி இடையிலான மிக நீண்ட எல்லைப் பகுதி ஐ.எஸ். அமைப்பின் ஆதிக்கத்துக்குள்ளாகும் என்று கூறப்படுகிறது.