இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக மூவர் தலைகள் துண்டிப்பு

egypt_flag_001இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் கூறி, எகிப்தின் சினாய் மாகாணத்தில் இயங்கி வரும் அன்ஸார் அல்-மக்தஸ் (ஏ.பி.எம்.) என்ற பயங்கரவாத அமைப்பு 3 பேர்

தலைகளைத் துண்டித்துக் கொலை செய்தது.

மேலும், எகிப்து ராணுவத்துக்காப் பணியாற்றியதாகக் கூறி மற்றொருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், அந்தப் படுகொலைக் காட்சிகளின் விடியோவை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

அந்த விடியோவில், தலை துண்டித்துக் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக அந்த மூவரும் தாங்கள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகவும், சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னதாக அந்த நபர், தாம் எகிப்து ராணுவத்துக்காகப் பணியாற்றியாதவும் ஒப்புக்கொள்வதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

ஏற்கெனவே, தங்களுக்கு எதிராக உளவு பார்த்ததாகக் கூறி 4 பேர் தலைகளைத் துண்டித்துக் கொலை செய்த விடியோ காட்சியை ஏ.பி.எம். அமைப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.

முன்னதாக, எகிப்தில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஏ.பி.எம். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதியான அதிபர் முகமது மோர்ஸி, கடந்த 2013-ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து, அந்த அமைப்பு தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த அமைப்பின் தாக்குதலுக்கு ஏராளமான போலீஸாரும், ராணுவத்தினரும் பலியாகினர்.

அந்நாட்டின் தெற்குப் பகுதியிலுள்ள ஒரு ராணுவச் சாவடியில் ஏ.பி.எம். பயங்கரவாதிகள் கடந்த ஜூலை மாதம் நிகழ்த்திய தாக்குதலில் 21 எல்லைக் காவல் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

 எகிப்தில் காலூன்றுகிறது ஐ.எஸ்.?

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்

படவிருப்பதாக ஏ.பி.எம். அமைப்பு அறிவித்துள்ளது.

4 பேரை படுகொலை செய்தது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட விடியோவில், எகிப்து பாதுகாப்புப் படையினரைக் கொல்லும்படி ஏ.பி.எம். அமைப்புக்கு ஐ.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர் செப்டம்பர் மாதம் அழைப்பு விடுத்த காட்சியும் இடம் பெற்றிருந்தது.

மேலும், ஐ.எஸ். அமைப்புக்கு ஆள்களைச் சேர்த்து வந்த கும்பல் ஒன்று சூயஸ் கால்வாய் துறைமுக நகரான “போர்ட் சையதில்’ பிடிபட்டுள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கூறினர்.

சிரியாவிலும், இராக்கிலும் ஐ.எஸ்.ஸூக்கு எதிராக வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வரும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் எகிப்து அண்மையில் இணைந்துள்ளது.