2007-க்கும் 2010-க்குமிடையே, பணிஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஓய்வூதியமாக ரிம4.6மில்லியன் கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருப்பதைத் தலைமைக் கணக்காய்வாளர்துறை கண்டுபிடித்துள்ளது.
இத்தொகையில் ரிம2.57 மில்லியன், இறந்துவிட்ட அரசு ஊழியர்கள் 1975 பேரின் குடும்பத்தாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத் திரும்பப்பெறும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதுவரை ரிம850,000 திரும்பப் பெறப்பட்டுள்ளது. எஞ்சி இருப்பது ரிம1.72 மில்லியன்.
206 பேர் மாதத் தவணையாக ரிம390,000 திருப்பிக் கொடுத்து வருகிறார்கள்.
ஓய்வூதியம் என்ற வகையில் அதிகப்படியாகக் கொடுக்கப்பட்ட இன்னொரு ரிம1.33மில்லியனைத் திரும்பப் பெற முடியாமல் இருக்கிறது. அதைப் பெற்ற பணிஓய்வு பெற்றவர்களின் குடும்பத்தாரைக் கண்டுபிடிக்க முடியாதிருப்பதும் சிலர் இறந்துபோனதும் மேலும் சிலர் அறிவிக்கைகளைக் கண்டுகொள்ளாமலிருத்தலும் இதற்குக் காரணமாகும்.
இறந்துபோனவர்களின் குடும்பத்தார் இறப்புப் பற்றி உடனடியாக தகவல் தெரிவிப்பதில்லை. அதன் விளைவாக அதிகப்படியான ஓய்வூதியம் கொடுக்கின்ற நிலை ஏற்பட்டு விடுகின்றது. ஒருவரின் விசயத்தில் அவர் இறந்துபோனது 62 மாதங்கள் கழித்துத்தான் பென்சன் பிரிவுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இன்னுமொருவரின் விசயத்தில் தசாம்ச புள்ளி விடுபட்டதால் பெரும்தொகை அதிகப்படியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
“பணி ஓய்வுபெற்ற அந்த ஊழியருக்கு மாதம்தோறும் கிடைக்க வேண்டியது ரிம214.33. ஆனால், அவருக்குக் கொடுக்கப்பட்டது ரிம21,433. 16 மாதங்களுக்கு இப்படிக் கொடுக்கப்பட்டது.
“அவர் 2007-இல் இறந்து போய்விட்டார்”, என்றந்த அறிக்கை கூறியது.
இப்போது அவரின் குடும்பத்தாரிடமிருந்தும் வங்கிகளிடமிருந்தும் அதிகப்படியாகக் கொடுக்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறும் முயற்சி நடைபெற்று வருகிறது.
அதிகாரிகள் கவனத்துடன் நடந்துகொண்டால் அதிகப்படியாக ஓய்வூதியம் கொடுக்கப்படும் நிலை உருவாகாது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.