குர்துக்கள் அதிகம் வசிக்கும் சிரியாவின் எல்லைப்புற நகரமான கொபானேவைக் கைப்பற்ற முயலும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கும், குர்துப் படையினருக்கும் இடையே இரண்டாவது நாளாக புதன்கிழமை கடும் சண்டை நடைபெற்றது.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் விமானத் தாக்குதல்கள் காரணமாக, அஸ்ன் அல்-அரபு என்று அழைக்கப்படும் அந்த நகரில் கைப்பற்றியிருந்த சில பகுதிகளிலிருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் பின்வாங்கியதாக சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு (எஸ்.ஓ.ஹெச்.ஆர்.) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் இயக்குநர் ராமி அப்துல் ரஹ்மான் புதன்கிழமை கூறியதாவது:
கொபானே நகரில் தாங்கள் பிடித்து வைத்திருந்த சில பகுதிகளிலிருந்தும், தென்மேற்கு எல்லைப் பகுதிகளிலிருந்தும் ஐ.எஸ். அமைப்பினர் செவ்வாய்க்கிழமை இரவு பின்வாங்கினர்.
அங்கிருந்து பின்வாங்கி, நகரின் கிழக்கு, தெற்குப் பகுதியிலிருந்து தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.
மேற்குப் பகுதியில் அவர்களது தாக்குதல்கள் ஓய்ந்துவிட்டன.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் நிகழ்த்திய விமானத் தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதே அவர்கள் பின்வாங்கியதற்குக் காரணம்.
அந்தத் தாக்குதல்களில் ஐ.எஸ். பயன்படுத்திய நான்கு வாகனங்கள் அழிக்கப்பட்டன என்றார் அவர்.
கொபானே நகரைக் கைப்பற்றும் முயற்சியில் மூன்று வாரங்களாக அந்நகரை முற்றுகையிட்டிருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள், திங்கள்கிழமை இரவு அந்நகருக்குள் நுழைந்து சில பகுதிகளைக் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து குர்துப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் கடும் சண்டை மூண்டது.
நகரின் கிழக்கு, மேற்கு, தெற்குப் பகுதிகளிலுள்ள வீதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் சண்டை நிகழ்ந்தது.
குர்துப் படையினருக்கு ஆதரவாக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ். இலக்குகள் மீது விமானத் தாக்குதல் நிகழ்த்தின.
இதுகுறித்து கொபானே நகரைச் சேர்ந்த பத்திரிகையாளரும், சமூக சேவகருமான முஸ்தஃபா எப்டி, தனது “ஃபேஸ்புக்’ வலைப் பதிவில்””கொபானே நகர வீதிகளிலும், மக்தாலா புறநகர்ப் பகுதியிலும் ஏராளமான ஐ.எஸ். பயங்கரவாதிகளின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன.
உணவு, குடிநீர் இன்றி நகர மக்கள் தவித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
துருக்கி எல்லையையொட்டி அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த கொபானே நகரைக் கைப்பற்றும் முயற்சியை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கினர்.
நகரைச் சுற்றிலும் பல பகுதிகளைக் கைப்பற்றி அவர்கள் முன்னேறிச் சென்றனர்.
அவர்களது வன்முறைக்கு அஞ்சி 1.86 லட்சம் பொதுமக்கள் நகரை விட்டு வெளியேறி, துருக்கிக்குள் தஞ்சம் புகுந்தனர்.
இந்தச் சண்டையில் இதுவரை 412 பேர் உயிரிழந்ததாக எஸ்.ஓ.ஹெச்.ஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும், உண்மையில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.