காணாமல் போன வியட்னாம் கப்பல் நாடு திரும்புகிறது

sunrise

சன்ரைஸ் 689 கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் காணமல்போன வியட்முக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கப்பல் கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து ஒரு பகுதி எண்ணெயைத் திருடிக்கொண்டு, கப்பலையும் ஊழியர்களையும் அவர்கள் விடுதலை செய்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியட்னாமின் குவாங் ட்ரி துறைமுகத்தை நோக்கிக் கிளம்பிய சன்ரைஸ் 689 என்ற அந்தக் கப்பல் சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் காணாமல்போனது.

துப்பாக்கி மற்றும் கத்தியுடன் கப்பலில் ஏறிய கடற்கொள்ளையர்கள், தங்களைத் தாக்கினார்கள் என அந்தக் கப்பலின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கப்பலிலிருந்து எண்ணெயைத் திருடிவிட்டு, கப்பலையும் ஊழியர்களையும் வியாழக்கிழமையன்று அவர்கள் விடுவித்தனர்.

5,000 டன்னுக்கு மேல் எண்ணெய் ஏற்றிவந்த அந்தக் கப்பல் தற்போது வியட்னாமை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

“கடற்கொள்ளையர்கள் தகவல்தொடர்பு சாதனங்களை நொறுக்கிவிட்டு, எண்ணெயையும் கப்பலில் இருந்த பொருட்களையும் திருடிக்கொண்டனர்” என வியட்னாமின் கப்பல்துறை இயக்குனர் என்க்யூயென் நாட் தெரிவித்துள்ளார். கப்பலிலிருந்த எண்ணெயில் மூன்றில் ஒரு பகுதியை கொள்ளையர்கள் எடுத்துக்கொண்டதாக, அவர் கூறியுள்ளார்.

அந்தக் கொள்ளையர்கள் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள் என நம்புவதாக கப்பலின் துணை கேப்டனான பாம் வான் ஹோவாங் தெரிவித்துள்ளார்.

“எதிர்ப்புத் தெரிவித்தால் கொன்றுவிடுவோம் என அவர்கள் எங்கள் தொண்டையில் கத்தியை வைத்தபடி மிரட்டினர்” என கப்பலில் இருந்தபடி செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பான் வான் ஹோவாங் கூறியுள்ளார். ஓடுவதற்கு முயன்ற ஒரு ஊழியரின் கால் உடைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்காசியப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கடத்தலுக்குள்ளாகியிருக்கும் 12வது கப்பல் இது.

உலக அளவில் கடற்கொள்ளையர்களால் கப்பல் துறைக்கு வருடம்தோறும் 5 பில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்படுகிறது. -BBC