அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் பெண் மலாலாவுக்கு உலகம் முழுவதிலுமிருந்தும் பாராட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன.
2014ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை, குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மலாலா யூசஃப்சாய் ஆகியோருக்கு வழங்குவதாக நோபல் பரிசுத் தேர்வுக் குழு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
குழந்தைகள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும், அனைத்துக் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் இவர்கள் போராடி வருவதை அங்கீகரித்து இப்பரிசு வழங்கப்படுவதாக அக்குழு தெரிவித்தது.
இதையடுத்து, இவர்கள் இருவருக்கும், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ஆகியோரிடமிருந்து பாராட்டுகள் குவிந்துள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர்: இவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசை இவர்களுக்கு அளித்திருப்பதன் மூலம், உலகெங்கும் குழந்தைகள் நலனுக்காக ஓயாமல் போராடி வரும் ஏராளமானோரின் உழைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஜயீத் ராத் அல் கூறினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி: கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவின் முயற்சிகளால் உலகெங்கும் லட்சக்கணக்கான குழந்தைகளின் உரிமைகள் மேம்பட்டுள்ளன. வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், குழந்தைகளின் நலனைக் காப்பதில் இவர்கள் இருவரின் குறிக்கோளும் ஒன்றே. குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் அமெரிக்காவின் ஆதரவு தொடரும்.
ஹியூமன் ரைட்ஸ் வாச்: குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான இயக்கத்தை சர்வதேச இயக்கமாக மாற்றியவர் கைலாஷ் சத்யார்த்தி. பல ஆண்டுகளாக குழந்தைத் தொழிலாளர் முறையை, குறிப்பாக கொத்தடிமை முறையை, ஒழிக்க அவர் பாடுபட்டு வருகிறார். கைலாஷ், மலாலாவுக்கு நோபல் பரிசளித்திருப்பதன் மூலம், குழந்தைகள் நலனையும் உரிமையையும் காப்பதில் உள்ள பெரும் சவால்கள் உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளன என்று ஹியூமன் ரைட்ஸ் வாச் மனித உரிமைகள் அமைப்பின் குழந்தைகள் நலப் பிரிவின் தலைவர் பீட் ஷெப்பர்ட் கூறினார்.
“உலகக் குழந்தைகளுக்கு இது நன்னாள்’: ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய கவுன்சில் அமைப்புகள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளன. ஜெர்மனி அதிபர் ஜோக்கிம் கெளக், பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் வாழ்த்து தெரிவித்தனர். உலகக் குழந்தைகளுக்கு இது நன்னாள் என ஏஞ்சலா மெர்க்கெல் கூறினார்.
கைலாஷ் சத்யார்த்தி, புது தில்லியில் 1983-இல் “பச்பன் பச்சாவ் ஆந்தோலன்’ (குழந்தைகளைப் பாதுகாப்போம்) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை உருவாக்கினார்.
கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 80,000 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோராவில் கடந்த 1997-இல் பிறந்த மலாலா (வயது 17), பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தி தீவிர பிரசாரம் செய்து வந்தார். பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் செயல்படும் தலிபான்களின் அட்டூழியங்கள் குறித்து பிபிசி உள்ளிட்ட ஊடகங்களுக்கு கட்டுரை எழுதினார்.
இதனால் ஆத்திரமடைந்த தலிபான்கள், கடந்த 2012ஆம் ஆண்டில், பள்ளிக்கூடத்துக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த மலாலா மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த மலாலா, பிரிட்டனில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறினார். தற்போது பர்மிங்ஹாம் நகரில் பெற்றோருடன் தங்கி, தனது படிப்பைத் தொடர்ந்து வரும் மலாலா, பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தற்போது 17 வயதாகும் அவர், ஷகாரோவ் பரிசு உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
பான்-கி-மூன் பாராட்டு
உலகில் குழந்தைகள் நலனைக் காப்பதற்காகப் போராடுபவர்களில், இவர்கள் இருவரும் தலைசிறந்தவர்கள். இவர்களுக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், உலகில் குழந்தைகள் அனைவருக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் கூறியுள்ளார்.
மதிப்பை அளவிடமுடியாது: ஒபாமா
இப்போது அளிக்கப்பட்டிருக்கும் இந்தப் பரிசால், கைலாஷ் சத்யார்த்தியின் முயற்சிகளின் உண்மையான மதிப்பை அளவிட முடியாது. அவருடைய கடும் முயற்சியால், ஆயிரக்கணக்கான குழந்தைகள் சுதந்திரமாகவும் கண்ணியத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அனைத்து அமெரிக்கர்களின் சார்பிலும் பாராட்டுகள். உலகின் ஒவ்வொரு மனிதனின் கண்ணியத்தையும் உயர்த்திப் பிடிக்கப் போராடி வரும் அனைவருக்கும் இதன் மூலம் வெற்றி கிடைத்துள்ளது.
இளம் குழந்தைகளின் சுதந்திரம், அவர்களின் உரிமைகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை இப்பரிசளிப்பு நமக்கு உணர்த்தியிருக்கிறது. பராக் ஒபாமா, அமைதிக்கான நோபல் பரிசை 2009-ஆம் ஆண்டு பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.