கடந்த ஒரு மாத காலமாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் குறித்த எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில், அந்நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் பெரும் பரபரப்பும், வதந்தி தகவல்களும் பரவி வருகிறது.
வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன், கடைசியாக செப்டம்பர் மாதம் 3ம் திகதி இசை நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியுடன் கலந்துக் கொண்டார். அதுவே வட கொரிய அதிபர் மக்கள் முன்னும், ஊடகப் பார்வையிலும் பட்ட கடைசி நிகழ்வாகும். அதன் பின்னர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொது நிகழ்ச்சிகள், அரசு சார்ந்த நிகழ்வுகள் எதிலும் பங்கேற்காமல் உள்ளார்.
அவரது புதிய புகைப்படமும் வெளியிடப்படவில்லை. இதனால் கிம் ஜோங் உன் ‘காணாமல் போனதாக’ உள்நாட்டு ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டன.
இதனிடையே, வட கொரியாவின் முக்கிய அரசு நிகழ்ச்சியான முன்னாள் அதிபரும் கிம் ஜோங் உன்-னின் தந்தையுமான கிம்-2 சங்கின் நினைவு தின நிகழ்ச்சியிலும் கிம் ஜோங் பங்கேற்கவில்லை. ஆனால் நினைவு இடத்தில் கிம் ஜோங் உன் பெயரில் மலர் வளையம் மட்டும் வைக்கப்பட்டு இருந்தது.
இதனை குறிப்பிட்டு அதிபர் கிம் ஜோங்கின் சார்பாக நினைவிடத்துக்கு, மலர் வளையம் அனுப்பப்பட்டதாக அந்நாட்டு அரசின் ஊடகமான கே.சி.என்.ஏ-வில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், நாட்டின் முக்கிய அரசு நிகழ்ச்சியும் கிம்மின் குடும்ப நிகழ்விலும் அவர் பங்கேற்காமல் போனதும், அதற்கான காரணமும் முறையே தெரிவிக்கப்படாததும் வட கொரிய நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு காயம் ஏற்பட்டு, அதனால் அவருக்கு தொடர்ந்து மூட்டு வலி இருப்பதாகவும், உடல் நலக் குறைவால் அவர் வெளியே வரமாட்டார் என்று அந்த அரசு சார்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மேலும், தற்போது அரசு சார்ந்த பணிகளை அதிபரின் இளைய சகோதரி கிம் யோ ஜங் மேற்கொள்கிறார் என்று ஊடகம் தெரிவித்துள்ளது.
அதிபர் காணாமல் போன குழப்பம் ஒருபுறம் இருக்க, வட கொரியாவில் குடும்ப அரசியல் குழப்பம் இருப்பதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதனால், எதிரி நாடான தென் கொரியா இந்தச் சமயத்தை பயன்பபடுத்தி தங்கள் நாட்டின் மீது போர் நடத்தக் கூடும் என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.