ஹாங்காங் போராட்டம்: சாலைத் தடைகளை அகற்றத் தொடங்கினர் போலீஸார்

  • ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் சாலைகளின் நடுவே அமைத்த தடைகளை அகற்றும் போலீஸார். நாள்: திங்கள்கிழமை.
  • ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் சாலைகளின் நடுவே அமைத்த தடைகளை அகற்றும் போலீஸார். நாள்: திங்கள்கிழமை.

 ஹாங்காங்கில் முழுமையான ஜனநாயகத்தை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர், இரண்டு வாரங்களாக சாலையில் ஏற்படுத்தியிருந்த தடைகளை காவல்துறையினர் திங்கள்கிழமை அகற்றத் தொடங்கினர்.

ஹாங்காங்கின் அட்மிரல்டி பகுதியில் சாலைகளை ஆக்கிரமித்திருந்த போராட்டக்காரர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை இரவு வெகுவாகக் குறைந்தது.

இதனைப் பயன்படுத்தி, அப்பகுதியில் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த சாலைத் தடுப்புகளை போலீஸார் திங்கள்கிழமை அதிகாலையில் அப்புறப்படுத்தினர்.

எனினும், தாற்காலிகக் கூடாரம் அமைத்து அங்கு தங்கியிருந்த போராட்டக்காரர்களை போலீஸார் அப்புறப்படுத்தவில்லை.

சாலைப் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்ட தடுப்புகளை அப்புறப்படுத்துவதே தங்கள் நோக்கம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

“போராட்டக்காரர்கள் அனைவரும் போலீஸாரின் அறிவுரைப்படி நடந்துகொள்ள வேண்டுகிறோம்.

போலீஸாரின் நடவடிக்கைகளுக்கு யாரும் இடையூறு விளைவிக்க வேண்டாம்.

அனைவரும் சாலைத் தடுப்புகளை அகற்றிவிட்டு, அமைதியாகக் கலைந்து செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்’ என போலீஸார் ஒலிப் பெருக்கி மூலம் வலியுறுத்தினர்.

அட்மிரல்டி பகுதியில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் கலவரத் தடுப்புக் கவசங்கள் ஏதுமின்றி, ஒளிரும் மேலங்கி மட்டுமே அணிந்திருந்தனர்.

அட்மிரல்டி மட்டுமின்றி, ஹாங்காங்கின் மாங்காக் பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்ற இடத்திலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அங்கு, போலீஸார் மிளகாய்ப்பொடி தூவினால் அதிலிருந்து தப்புவதற்காக போராட்டக்காரர்கள் குடைகளை ஏந்தி நின்றனர்.

முன்னதாக, ஜனநாயக ஆதரவாளர்களும், அரசு ஆதரவாளர்களும், மாங்காக்கில் ஞாயிற்றுக்கிழமை கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் தலையிட்டு, ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்களுக்கும், போராட்ட எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நின்று மோதலைத் தடுத்தனர். ஏற்கெனவே இப்பகுதியில் இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளதால், பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.