குர்து கிளர்ச்சியாளர்கள் மீது துருக்கி விமானத் தாக்குதல்

kurds_strike_001கிளர்ச்சி அமைப்பான குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சியினரின் நிலைகள் மீது துருக்கி போர் விமானங்கள் திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்தின.

துருக்கி பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் இது குறித்து செவ்வாய்க்கிழமை தெரிவித்த விவரம்:

இராக்கை ஒட்டியொள்ள துருக்கியின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஹக்காரி மாகாணத்தில் தாக்லிகா என்ற இடத்தில் குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சியினரின் (பி.கே.கே.) நிலைகள் மீது, துருக்கி போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின என்று அவர் கூறினார்.

பி.கே.கே. அமைப்பை பயங்கரவாத இயக்கமாக துருக்கியும் பல்வேறு நாடுகளும் அறிவித்துள்ளன. 30 ஆண்டுகளாக அந் அமைப்பு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதில் துருக்கியில் 40,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த அமைப்புடன் துருக்கி அரசு, சென்ற ஆண்டு சமரச உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டது.

இதற்கிடையே, சிரியாவில் குர்துக்கள் பகுதியான கொபானே நகரைக் கைப்பற்ற இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குர்துக்களுக்கு ஆதரவாக துருக்கி ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அந்நாடு முழுவதுமுள்ள குர்துக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த குழப்பம் நிறைந்த சூழ்நிலையில், தாக்லிகா பகுதியில் காவல் நிலையத்தை நோக்கி பி.கே.கே. அமைப்பினர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, துருக்கி போர் விமானங்கள் பி.கே.கே. நிலைகள் மீது எதிர்த் தாக்குதல் நடத்தியுள்ளன.

நாட்டின் அமைதியான சூழலை, சில தீய சக்திகள் குலைக்கப் பார்க்கின்றன என்று துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் கூறினார்.