ஏஜி அறிக்கை: ஒரு வீட்டுக்கு மின்தொடர்பு கொடுக்க ரிம770,000

தெனாகா நேசனல் பெர்ஹாட், அதன் கிராமப்புற மின்னளிப்புத் திட்ட (பிஇஎல்பி) த்தின் கீழ் ஒரே ஒரு வீட்டுக்கு மின்தொடர்பு ஏற்படுத்திக்கொடுக்க ரிம770,000 செலவிட்டிருக்கிறது.

பகாங், இந்த்ரா மக்கோத்தாவில் 17 வீடுகளுக்கு மின்விநியோகம் அளிக்கத்தான் திட்டம் போடப்பட்டிருந்தது.

ஆனால், தணிக்கை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தால் ஒரே ஒரு வீடுதான் இருந்தது.

அதற்கு டிஎன்பி, அங்கு 17 வீடுகளைக் கட்டும் பணிதான் தொடங்கப்பட்டது என்றும் முடிவில் ஒரே ஒரு வீடு கட்டப்பட்டதுடன் நின்று போனது என்றும் விளக்கம் அளித்தது.

பகாங், பெராவில் உள்ள ஒரு கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் ஐந்து வீடுகளுக்கு மின்விநியோகம் அளிக்க டிஎன்பி  ரிம65,193 ஒதுக்கீடு செய்திருந்ததாகவும் அறிக்கை குறிப்பிட்டது.

டிஎன்பி-இன் பிஇஎல்பி திட்டத்தின் அடைவுநிலை திருப்திகரமாக இல்லை என்று தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கை கூறியது. பிஇஎல்பி-இன்கீழ் 37 திட்டங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது.ஆனால், கடந்த ஆண்டு முடிய 16 திட்டங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கரையானுக்கு இரையான கணினிகள்

இன்னொரு நிலவரத்தில், சாபாவில் பள்ளிகளில் கணினிக் கூடங்கள் அமைத்து அவற்றுக்குத் தேவையான கணினிகளை வழங்க டைம்கோம் ஹோல்டிங்ஸ் சென்.பெர்ஹாட்டிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த ரிம160.74மில்லியன் திட்டம் படுதோல்வி அடைந்திருப்பதாக தலைமைக் கணக்காய்வாளர் கூறினார்.

கோட்டா கினாபாலு, எஸ்கே கெபாயானுக்கு தணிக்கை அதிகாரிகள் சென்றபோது அங்கு பள்ளிகளுக்கான கணினிகளும் மற்ற தகவல்தொடர்புச் சாதனங்களும் அவை வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகள் திறக்கப்படாமல் மூன்றாண்டுகளாக அப்படியே வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.

சில கணினிகளிலும் மற்ற சாதனங்களிலும் கரையான்கள் புகுந்து விளையாடி இருந்தன.

கணினிக் கூடங்கள் அமைக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம்தான் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.அவற்றைக் கட்டும் பணி 2006 அக்டோபர் 31-இல் தொடங்கி 2008 ஏப்ரல் 30-ல், முடிவடைந்திருக்க வேண்டும்.

ஆனால்,  திட்டமிடப்பட்ட 300 கணினிக் கூடங்களில் 2010-இல் இரண்டே இரண்டு மட்டுமே கட்டி முடிக்கப்பட்டு கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

குத்தகையாளருக்கு மொத்த கட்டுமானச் செலவான ரிம113.74மில்லியன் ரிங்கிட்டில் 87விழுக்காடு அதாவது ரிம98.90மில்லியன் கொடுக்கப்பட்டுவிட்டது என்றபோதிலும் இந்நிலை.