ஹாங்காங்கில் முழுமையான ஜனநாயகத்தை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த வாக்கெடுப்பை போராட்டக் குழுவினர் தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
வாக்கெடுப்பு முறை குறித்து குழுக்களிடையே நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், விரைவில் வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போராட்டக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வாக்கெடுப்பை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து போராட்டக் குழுக்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்துள்ளன.
அவை ஒன்றுக்கொன்று முரண்படுவதால், இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்வரை வாக்கெடுப்பை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூடிய விரைவில் வாக்கெடுப்பு நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் ஆட்சித் தலைவர் தேர்தலை சுதந்திரமாக நடத்துவதற்கு சீன அரசு மறுத்து வரு
வதை எதிர்த்து, மாணவர் குழுக்களும், ஜனநாயகவாதிகளும் சாலை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுடன் கடந்த புதன்கிழமை பேச்சுவார்த்தை நிகழ்த்திய ஹாங்காங் அரசு, அரசியல் சீர்திருத்தம் குறித்து விவாதம் நடத்த இரு தரப்பிலும் குழுக்களை அமைக்கும் யோசனையை முன்வைத்தது.
இந்நிலையில், அண்மைக் காலமாக போராட்டத்தின் தீவிரம் குறைந்து வருவதையடுத்து, அரசின் யோசனைகளை ஏற்பது குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கருத்துகளைக் கேட்டறியும் விதமாக, மொபைல் போன் மூலம் ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.