சிரியாவின் எல்லைப்புற நகரான கொபானேவில், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுடன் போரிடுவதற்காக சிரியா கிளர்ச்சிப் படையினர் துருக்கி வழியாக அந்த நகருக்குள் புதன்கிழமை நுழைந்தனர்.
“சுதந்திர சிரியா ராணுவம்’ என்று அழைக்கப்படும், அதிபர் அல் அஸாதுக்கு எதிராகப் போராடி வரும் கிளர்ச்சிப் படையினர் சுமார் 50 பேர், சிரியா – துருக்கி எல்லை வழியாக அந்த நகருக்குள் நுழைந்தனர்.
சிரியாவில், ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வரும் அரசுப் படையினர், கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் எதிராக ஐ.எஸ். பயங்கரவாதிகள் வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளனர்.
இதனால் ஐ.எஸ். அமைப்பை எதிர்த்துப் போராடி வரும் சிரியா கிளர்ச்சியாளர்கள், கொபானே நகரில் ஐ.எஸ். அமைப்புடன் கடுமையாகச் சண்டையிட்டு வரும் குர்து இனத்தவருக்கு ஆதரவாகப் போரிட அந்த நகருக்குச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, கொபானேவிலுள்ள குர்து அதிகாரி இத்ரிஸ் ஹஸன் துருக்கியின் முர்ஸித்பினார் நகரில் கூறுகையில், “”முர்ஸித்பினார் நகர் வழியாக சிரியா கிளர்ச்சியாளர்கள் கார்கள் மூலம் கொபானே வந்தடைந்தனர்” என்று தெரிவித்தார்.
இவர்களைத் தவிர, பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் குர்துகளுக்கு தோள் கொடுப்பதற்காக, இராக் குர்து படையினரும் கொபானே நகர் செல்லவுள்ளனர். இதற்கென, இராக்கின் “பேஷ்மெர்கா’ குர்து படையினர் சுமார் 150 பேர், புதன்கிழமை காலை துருக்கி வந்தடைந்தனர்.
அவர்களும், விரைவில் துருக்கி எல்லை வழியாக கொபானேவுக்குள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.