உக்ரைனில், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள கிழக்குப் பகுதியில் மேலை நாடுகளின் எதிர்ப்பையும் மீறி நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற கிளர்ச்சிக் குழுத் தலைவர் அலெக்ஸாண்டர் ஸாகர்சென்கோ, அப்பகுதியின் பிரதமராக செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.
டொனெட்ஸ்க் நகரிலுள்ள அரங்கம் ஒன்றில், மிகுந்த பாதுகாப்புக்கிடையே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அலெக்ஸாண்டர் ஸாகர்சென்கோவுக்கு எதிராக, சக்தி வாய்ந்த தலைவர்கள் யாரும் கிடையாது என்பதால், அவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தல் வெறும் சம்பிரதாயமே என்று கூறப்படுகிறது.
உக்ரைனிலிருந்து விடுதலை பெறுவதற்கு, இந்தத் தேர்தலை ஒரு துருப்புச் சீட்டாக கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன், மேலை நாடுகள் எதிர்ப்பு: உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு இந்தத் தேர்தல் குந்தகம் விளைவிக்கும் என உக்ரைனும், மேற்கத்திய நாடுகளும் கூறியுள்ளன.
உக்ரைன், கிளர்ச்சியாளர்கள், ரஷியா இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையிலும், கிழக்கு உக்ரைனில் ஆங்காங்கே மோதல்கள் நிகழ்வது தினசரி நிகழ்வாக உள்ளது.
இந்நிலையில், இந்தத் தேர்தலால் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என உக்ரைன் அரசு எச்சரித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தாலும், அந்தத் தேர்தல் தங்களது சட்டத்துக்கு உட்பட்டே நடத்தப்பட வேண்டும் என உக்ரைன் கூறி வருகிறது.
அமெரிக்கா கண்டனம்: இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் நடந்து முடிந்த தேர்தல் சட்டத்துக்குப் புறம்பானது என அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் பெர்னடெட் மீஹன் செவ்வாய்க்கிழமை கூறுகையில், “”ரஷியாவின் ஆதரவுடன், உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் சட்ட விரோதமாக தேர்தல் நடத்தியுள்ளதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது” என்று கூறினார்.
ஐ.நா. அறிக்கைக்கு ரஷியா எதிர்ப்பு: முன்னதாக, கிழக்கு உக்ரைன் தேர்தலுக்கு ரஷியா அங்கீகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்தத் தேர்தலுக்கு எதிராக ஐ.நா. தயாரித்துள்ள அறிக்கையை வெளியிடவும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நா.வுக்கான ரஷிய தூதுக்குழு இதுகுறித்து கூறுகையில், “”அந்த அறிக்கை அரைகுறையாகவும், தெளிவில்லாமலும் உள்ளது” என்று தெரிவித்தது.