நைஜீரியாவில் மத ஊர்வலம் ஒன்றின் மீது போகோ ஹராம் பயங்கரவாதி ஒருவர் திங்கள்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். 119 பேர் காயமுற்றனர்.
அந்த நாட்டின் பொடிஸ்கும் நகரில் மிதவாத இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு நிகழ்த்திய மத ஊர்வலத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் இருவரை கூட்டத்தினர் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர்.
கூட்டத்தினரிடமிருந்து அவர்களை மீட்க ராணுவம் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்தது.
அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியில், குண்டு பாய்ந்து இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
தாக்குதலுக்குள்ளான இருவரில் ஒருவர் காவல்துறையைச் சேர்ந்தவர் என்பது பின்னர் தெரிய வந்தது.
இறுதியில், அந்த இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறை உடைப்பு: மற்றொரு சம்பவத்தில், கோகி மாகாணத்திலுள்ள சிறை ஒன்றில் திங்கள்கிழமை தாக்குதல் நிகழ்த்திய பயங்கரவாதிகள், அங்கிருந்த 145 கைதிகளை விடுவித்தனர்.
இந்தத் தாக்குதலில் கைதி ஒருவர் உயிரிழந்தார்.
தப்பியோடிய கைதிகளில் 12 பேர் மீண்டும் பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.