சிரியாவிலும், இராக்கிலும் நடப்பது உலகப் போர்?

உலகின் மிகப்பெரிய பயங்கரவாத இயக்கமாக உருவெடுத்துள்ள ஐ.எஸ். (இஸ்லாமிய தேசம்) அதன் கொடூரத் தாக்குதல்களால் சர்வதேச நாடுகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. “அல்காய்தா, தலிபான்கள், லஸ்கர்-இ-தொய்பா போன்ற இயக்கங்களைவிட பணபலத்திலும் படைபலத்திலும் மிக வலுவான இது, இதுவரை பார்க்காத அதிக பண மதிப்பைக் கொண்டுள்ள இயக்கம்’ என்கிறார் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. முன்னாள் நிபுணர் மேத்யூ லெவிட்.

“இராக்கிலும், சிரியாவிலும் பல்வேறு எண்ணெய் வளங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ்., எண்ணெய் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் முதல் 2 மில்லியன் டாலர்வரை சம்பாதிக்கிறது. இது தவிர, கத்தார், குவைத் போன்ற நாடுகளைச் சேர்ந்த அந்த இயக்கத்தின் அனுதாபிகளின் நன்கொடை மூலமும் நிதி நிலைமையை வளப்படுத்துகிறது’ என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

அல்-காய்தாவிலிருந்து பிரிந்த இயக்கம்தான் ஐ.எஸ். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக 2011 முதல் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு

வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள், 2014 ஜூனில் தங்களது தாக்குதலை இராக்கின் வடக்கு, மேற்குப்புற பகுதிகளில் தீவிரப்படுத்தி, இப்போது பெரும்பாலான பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சிரியா, துருக்கி எல்லையில் குர்திஸ் பிராந்தியத்தில் உள்ள சிரியாவின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான கொபானி இப்போது ஐ.எஸ்.ஸின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது.

அரசுப் படைகளுக்கு ஆதரவாகச் செயல்படுவோரை கூட்டம் கூட்டமாகப் பிடித்துவைத்துக் கொல்லும் இந்த இயக்கத்தின் கொடூர பாணி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த இயக்கத்தின் தாக்குதல் முறையால் ஈர்க்கப்பட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து ஐ.எஸ்.ஸில் சேர்ந்து வருவதுதான் பேரதிர்ச்சி.

இராக், சிரியாவில் மொத்தம் 20,000 முதல் 31,500 பேர் ஐ.எஸ். படையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. இவர்களில் 80 நாடுகளைச் சேர்ந்த 15,000 பேரும் அடக்கம்.

இராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்குப் பிறகு நேரடி ராணுவ நடவடிக்கையில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த அமெரிக்கா, ஐ.எஸ்.ஸின் எழுச்சியைப் பார்த்து தனது முடிவை மாற்றிக்கொண்டது. ஐ.எஸ். இயக்கத்தின் ஆதிக்கம் மத்திய கிழக்கு முழுவதும் வலுவடையாமல் தடுக்கும் பொருட்டு ஆகஸ்ட் 6 முதல் விமானத் தாக்குதலில் அமெரிக்க ஈடுபட்டு வருகிறது. மேலும், ஐ.எஸ்.க்கு எதிரான சர்வதேச கூட்டணியையும் செப்டம்பர் 10இல் அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார். இந்தக் கூட்டணியில் பிரிட்டன், கனடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்பட 60 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், நேரடி ராணுவ நடவடிக்கையில் சவூதி அரேபியா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட சில நாடுகளே ஈடுபட்டிருக்கின்றன. பிற நாடுகள் போர் உபகரணங்கள், தொழில்நுட்ப உதவிகள் போன்றவற்றைச் செய்து வருகின்றன.

இருப்பினும், ஐ.எஸ்.க்கு எதிரான இத்தாக்குதல் நடவடிக்கையில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஐ.எஸ். ஒரு பக்கம், அதற்கு எதிராக சிரியாவின் ராணுவம், குர்திஸ் படை ஒரு பக்கம் என நாள்தோறும் நடக்கும் சண்டையில் படைவீரர்கள், பயங்கரவாதிகள் இறப்பைவிட, அப்பாவி பொதுமக்களின் இழப்புதான் அதிகமாக உள்ளது. 2011 மார்ச் முதல் 2014 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் சிரியாவில் உள்நாட்டுப் போரால் 1,91,000 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 8000 பேர் குழந்தைகள். இது தவிர, சிரியாவிலும், இராக்கிலும் லட்சக்கணக்கானோர் வீடிழந்து, உடைமைகளை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாகத் தவிக்கின்றனர்.

80 நாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள், 60 நாடுகளைச் சேர்ந்த அரசுப் படைகளுக்கு இடையே சிரியாவிலும், இராக்கிலும் நடக்கும் சண்டையை உள்நாட்டுப் போர் என்பதைவிட ஓர் உலகப் போர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

யார் இந்த அபு பக்கர் அல்-பாக்தாதி?

ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி. இராக்கில் சமாரா என்ற பகுதியில் பிறந்தவராகக் கருதப்படும் இவரை, தேடப்படும் பயங்கரவாதியாக அமெரிக்கா 2011ஆம் ஆண்டு அறிவித்தது. இவரது தலைக்கு 10 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) டாலர் பரிசுத் தொகையும் அறிவித்துள்ளது. -http://www.dinamani.com/world