உக்ரைனுக்குள் ரஷிய பீரங்கிகள் அத்துமீறி நுழைந்ததாகப் புகார்

Ethnolingusitic_map_of_ukraine

தங்கள் நாட்டு எல்லைக்குள் 32 ரஷிய பீரங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுத வாகனங்கள் அத்துமீறி நுழைந்ததாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆன்ட்ரி லைùஸன்கோ தலைநகர் கீவில் வெள்ளிக்கிழமை கூறுகையில், கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்திலுள்ள லுகான்ஸ்க் பகுதியில் ரஷிய ராணுவத்தின் 32 பீரங்கிகள் அத்துமீறி நுழைந்துள்ளன. மேலும், 16 ஹோவிட்ஸர் ரக பீரங்கிகள் நுழைந்தன. இது தவிர, ராணுவ வீரர்கள், தளவாடங்களுடன் 30 லாரிகளும் உக்ரைன் பகுதிக்குள் வியாழக்கிழமை நுழைந்துள்ளன.

இவை தவிர, உக்ரைன்-ரஷிய எல்லையையொட்டிய மற்றொரு பகுதியில் பல லாரிகள், ரேடார் கருவிகள் பொருத்திய மூன்று வாகனங்கள் உக்ரைனுக்குள் அத்துமீறிப் பிரவேசித்துள்ளன என்று அவர் கூறினார்.

இதனிடையே, லுகான்ஸ்க் பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற சண்டையில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் 31 பேர் காயமடைந்தனர்.

டொனெட்ஸ்க் பகுதியில் வியாழக்கிழமை இரவு முழுவதும் குண்டு வீச்சு நடைபெற்றதாக மேயர் அலுவலகம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் 15 பேருக்கு காயமேற்பட்டதாகக் கூறப்பட்டது.