அமெரிக்காவின் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ்-ன் முக்கிய தலைவர்கள் பலி

america_isis_001ஈராக்கில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பலர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈராக்கின் வட மேற்கில் அன்பர் என்ற மாகாணத்தில் உள்ள குவாயிம் என்ற நகரில் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள் ஒன்று கூடி கூட்டம் நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த இடத்தைக் குறி வைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் பல முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

ஈராக் அதிகாரிகள் கூறுகையில், இந்தத் தாக்குதலில் பல முக்கியத் தலைவர்கள் பலியாகி விட்டதாக நம்புகிறோம். யாரெல்லாம் கொல்லப்பட்டனர் என்ற தகவலுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

மேலும், இந்த கூட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவரும், அவர்கள் நிறுவிய இஸ்லாமியக் குடியரசின் அதிபருமான அபு பக்கீர் அல் பக்தாதியும் இருந்ததாகவும் தகவல் கூறுகிறது.

ஒருவேளை அல் பக்தாதி அங்கு இருந்து அவர் கொல்லப்பட்டிருந்தால் அது மிகப் பெரிய வெற்றியாக அமையும் என்று ஈராக் நம்புகிறது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு குறித்த ஆய்வாளரான ஈராக்கைச் சேர்ந்த ஹிஷம் அல் ஹஷிமி கூறுகையில், தாக்குதல் நடந்தபோது அந்த இடத்தில், இஸ்லாமியக் குடியரசின் அன்பர் மாகாண தலைரான அபு முஹன்னத் அல் ஸ்வதேவி, சிரியாவின் டெய்ர் அல் ஸோர் மாகாண தலைவரான அபு ஸஹரா அல் மஹமதி ஆகியோர் அங்கு இருந்தனர் என்பது உண்மைதான்.

இருவரும் கொல்லப்பட்டு விட்டதாக எனக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன என்று கூறியுள்ளார்.

மேலும், இந்தத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஐஎஸ்ஐஎஸ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -http://world.lankasri.com