அமெரிக்கத் தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் பாக்தாதி பலி?

  • அல்-பாக்தாதி

    அல்-பாக்தாதி

இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கத்துக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் நடைபெற்று வரும் விமானத் தாக்குதலில் அவ்வியக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இராக்கில் மொசூல் நகரில் ஐ.எஸ். இயக்கத் தளபதிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது, அப்பகுதியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வியக்கத்தின் தளபதியொருவர் கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரின் தலைமைக் கட்டுப்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் ரைடர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசும்போது, ஐஎஸ் தளபதிகளுக்கு எதிரான தாக்குதலை உறுதிப்படுத்தினார். அவர் தெரிவித்த விவரம்:

இராக்கின் மொசூல் நகரின் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ.எஸ். தளபதிகள் கூட்டத்துக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் விமானத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்களின்போது, ஐ.எஸ். இயக்கத்தினரின் ஆயுதமேந்திய 10 கனரக வாகனங்கள் அழிக்கப்பட்டன.

கூட்டுப் படையினரின் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி அங்கு இருந்தாரா, அவர் கொல்லப்பட்டாரா என்பது குறித்து தற்போது உறுதிப்படுத்த இயலாது.

இந்தத் தாக்குதல்கள் மூலம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்குத் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வருகிறோம். வெளியுலகுடன் அவர்களின் தொடர்புகள், அவர்களுடைய கட்டுப்பாட்டு அமைப்பு, அவர்களின் செயல்பாடு அனைத்தையும் முடக்கும் விதமாக அமெரிக்கக் கூட்டுப் படையினரின் தாக்குதல்கள் தொடரும் என்று அவர் கூறினார்.

இராக், சிரியா நாடுகளின் கணிசமான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது இஸ்லாமிய தேச இயக்கம். அவர்கள் வசமுள்ள பகுதியின் “கலீஃபா”வாக பாக்தாதி தன்னை அறிவித்துக் கொண்டார்.

கடந்த ஜூலை மாதம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட விடியோவில், அனைத்து முஸ்லிம்களும் தன் தலைமையை ஏற்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

அவரைப் பிடித்துத் தருபவருக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 60 லட்சம்) பரிசை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

அல்-பாக்தாதி உயிரிழந்தது உண்மையானால், ஐ.எஸ்.ஸýக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்காவுக்குக் கிடைத்துள்ள பெரும் வெற்றியாக கருத இடமுண்டு.

பிரிட்டனின் தலைமைத் தளபதி நிகலஸ் ஹாட்டன் பிபிசி தொலைக்காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், “பாக்தாதி இறந்த செய்தி வெளியாகியுள்ளதை உறுதி செய்வதற்கு சில நாட்களாகும்’ என்று கூறினார்.

“காயமடைந்தார்’

வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்கக் கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி காயமடைந்தார் என அல்-அரபியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த இயக்கத்தின் முக்கியத் தளபதியொருவர் இத்தாக்குதலின்போது உயிரிழந்தாகவும் அந்த தொலைக்காட்சி தெரிவித்தது. இந்த செய்தி வெளியானதையடுத்து, அல்-பாக்தாதி இறந்துவிட்டார் என்ற உறுதி செய்யப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன.

தகவல் குறித்து இராக் விசாரணை

அல்-பாக்தாதி இறந்துவிட்டாரா என்பது குறித்து இராக் அரசு விசாரித்து வருவதாக அந்நாட்டு உளவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

தலைநகர் பாக்தாதில் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், அதிகாரபூர்வமற்ற செய்திகள் அரசுக்கு வந்துள்ளன. இதனை உறுதி செய்ய முயற்சி செய்து வருகிறோம் என்றார் அவர்.

இந்நிலையில், இராக் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் காட்டும் வகையில், ஞாயிற்றுக்கிழமை தலைநகர் பாக்தாதில் நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டுத் தாக்குதல்களில் 43 பேர் உயிரிழந்தனர். ஷியா பிரிவினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. -http://www.dinamani.com/world