ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவரின் நெருங்கிய கூட்டாளி கொலை செய்யப்பட்டதால், அவ்வியக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஈராக், சிரியா நாடுகளின் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசமாக அறிவித்து, அதன் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டவர் ஐ.எஸ்.ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதி.
கடந்த 2010–ம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தொடங்கப்பட்டவுடன், அல்கொய்தாவின் உள்ளூர் கிளையை தனது தனி தீவிரவாத இயக்கமாக மாற்றிக் கொண்டார்.
இவரது தலைக்கு அமெரிக்கா பரிசு அறிவித்திருந்த நிலையில், ஈராக்கின் மேற்கு அன்பார் மாகாணத்தில் மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவர்களின் கூட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது.
எனவே அங்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் ஈராக்கின் பாதுகாப்புத்துறையும், உள்துறையும் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், அல் பாக்தாதி காயம் அடைந்தார் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதியின் நெருங்கிய கூட்டாளியான அபு ஹூதாய்பா அல் யாமினி என்பவர், ஈராக்கில் பலுஜா நகரில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதாக ஈராக் அரசு டெலிவிஷன் அறிவித்துள்ளது.
எனவே ஐஎஸ் இயக்கத்தின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது, ஒருவேளை பாக்தாதி இறந்திருந்தால் அல் யாமினி தான் அடுத்த தலைவராக இருந்திருப்பார்.
இவரும் கொல்லப்பட்ட நிலையில் அபு அல் அன்பாரி அல்லது அபு முஸ்லிம் அல் துர்க்மணி தான் அடுத்த தலைவர் என்று கூறப்படுகிறது.
மேலும் துர்க்மணி இறந்துவிட்டதாக ஈராக் பாதுகாப்பு துறை அமைச்சர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.