ஐ.எஸ். தலைவரின் நிலை குறித்த மர்மம் நீடிப்பு

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை உறுதி செய்ய முடியவில்லை என அமெரிக்க பாதுகாப்புத் துறைத் தலைமையகமான பென்டகன் கூறியுள்ளதையடுத்து, இந்த விவகாரத்தைச் சூழ்ந்துள்ள மர்மம் நீடிக்கிறது.

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் வான்வழித் தாக்குதலில் அல்-பாக்தாதி கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது காயமடைந்திருக்கலாம் என்ற செய்திகள் கடந்த இரு தினங்களாக உலவி வருகின்றன.

இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் கர்னல் ஸ்டீவன் வாரன் திங்கள்கிழமை கூறியதாவது:

அல்-பாக்தாதியின் கதி குறித்து முன்னுக்குப் பின் முரணான பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அனால், அவரது தற்போதைய நிலை குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வரவில்லை என்பதே உண்மையான நிலவரம்.

மொசூல் நகரில் ஐ.எஸ். தலைவர்கள் கூட்டம் ஒன்றில் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பாக்தாதியின் மரணம் குறித்த பல்வேறு வதந்திகள் உலவுகின்றன என்றார் அவர்.

முன்னதாக, அல்-பாக்தாதி மீது இராக் பாதுகாப்புப் படையினர் அன்பார் மாகாணத்திலுள்ள காயிம் நகரில் சனிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக இராக் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.