இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் சீனா ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தினார்.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் ஆசிய – பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள ஒபாமா செவ்வாய்க்கிழமை இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
பயங்கரவாதம் என்பது சர்வதேச அளவில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. பயங்கரவாதம் எந்த உருவில் இருந்தாலும் அமெரிக்கா அதனை எதிர்த்துப் போராடும். பயங்கரவாதத்துக்கு எதிரான பிற நாடுகளின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தனது முழு ஒத்துழைப்பை அளிக்கும்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
கிழக்கு ஆசிய பகுதியில் பரவியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதத்துக்கு எதிராகவும் பிற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் அமெரிக்கா, சீனா இடையேயான ஒத்துழைப்புக்குத் தயாராக இருக்கிறோம்.
வெளிநாட்டிலிருந்து பயங்கரவாதிகள் போர் நடக்கும் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தடுத்தல், பயங்கரவாதிகளின் நிதி ஆதாரங்களைத் துண்டித்தல் ஆகிய நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற முடியும்.
சீன எல்லைப் பகுதியில் செயல்பட்டு வரும் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தின் பயங்கரவாதச் செயல்களை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கிறது. ஒரு கணவன் என்ற நிலையிலும், ஒரு தந்தை என்ற நிலையிலும் அந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களின் துயரை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அந்த வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஒபாமா பேசியுள்ளார்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங் – ஒபாமா இடையே நேரடிப் பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில், ஒபாமா இவ்வாறு பேசியுள்ளார்.
கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தினரின் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக சீனா கடுமையான நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில், ஒபாமா தெரிவித்திருக்கும் கருத்துகள் சீனாவை உற்சாகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
சீனாவின் மேற்கு எல்லைப் பகுதியில் செயல்பட்டு வரும் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பொதுமக்களுக்கு எதிராக கத்திக் குத்து போன்ற பயங்கரவாத வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
துருக்கி மொழி பேசும் உயிகுர் சிறுபான்மையினர், சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வசித்து வருகின்றனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட இவர்களிடையே நிலவி வரும் அரசியல் அதிருப்தியைத் தங்களுக்கு சாதகமாக கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்களில் சிலர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளதாக சீன அரசு கருதுகிறது.