ஆளில்லா விமானம்: விடியோவை வெளியிட்டது ஈரான்

கைப்பற்றப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத்தை அடிப்படையாகக் கொண்டு தான் உருவாக்கியுள்ளதாகக் கூறிவரும் விமானத்தின் விடியோவை ஈரான் புதன்கிழமை வெளியிட்டது.

ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த விடியோவில், கருப்பு நிற விமானம் ஒன்று மலைப்பாங்கான பகுதியின் மேல் பறக்கும் காட்சியும், அது அடையாளம் தெரியாத ஒரு விமானதளத்தில் தரையிறங்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

2011-ஆம் ஆண்டு தங்கள் வான் எல்லையில் கைப்பற்றப்பட்ட அதிநவீன அமெரிக்க ஆளில்லா விமானத்தை பகுப்பாய்வு செய்து, அதன் அடிப்படையில் புதிய விமானத்தை உருவாக்கி வருவதாக ஈரான் கூறி வந்தது.

இந்நிலையில், முதன்முறையாக இந்த விடியோ மூலம் அதற்கான ஆதாரத்தை அந்த நாடு வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஈரான் ராணுவ விமான ஆய்வுப் பிரிவின் தலைவர் அமீர் அலி ஹாஜிஸாடே கூறியதாவது:

தற்போது வெற்றிகரமாப் பறக்கவிடப்பட்டுள்ளதைப் போன்ற மேலும் இரண்டு அல்லது மூன்று விமானங்கள் அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் தயாரிக்கப்படும்.

கைப்பற்றப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத்தையும்விட மேம்பட்ட வடிவமைப்பையும், செயல்திறனையும் கொண்டதாக இந்தப் புதிய விமானங்களை ஈரான் உருவாக்கியுள்ளது.

ஈரான் தயாரிக்கும் விமானங்கள், அமெரிக்க விமானங்களைவிட குறைவான எடை கொண்டவை. எரிபொருள் திறன் மிக்கவை. அதிக நேரம் பறக்கக் கூடியவை.

அமெரிக்கர்களைப் போல நாங்கள் இந்த விமானத்தை உலோகம் கொண்டு தயாரிக்கவில்லை. எனவே, ராடாரின் கண்களுக்கு அவை அவ்வளவு எளிதில் புலப்படாது என்றார் அவர்.

ஈரான் வான் எல்லைக்குள் 2011-ஆம் ஆண்டு நுழைந்த அமெரிக்காவின் ஆர்.க்யூ. 170 சென்டினல் ரக ஆளில்லா விமானம் ஒன்றை ஈரான் கைப்பற்றியது.அந்த விமானத் தொழில்நுட்பங்களைப் பகுத்தாய்ந்து, அதன் அடிப்படையில் தாங்களே புதிய ஆளில்லா விமானத்தை வடிவமைத்துள்ளதாக அண்மையில் தெரிவித்த ஈரான், தற்போது இந்த விடியோவை வெளியிட்டுள்ளது.