ரஷ்யா மீது பொருளாதார தடை! பிரித்தானியா எச்சரிக்கை

david-cameron_2உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரேன் அரசு படைகளுக்கும் இடையே போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எனினும் கடந்த சில நாட்களாக குறித்த பகுதியில் மீண்டும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

கிளர்ச்சியாளர்களுக்கு, வீரர்களை அனுப்பியும், ஆயுதங்களை வழங்கியும் ரஷ்யா உதவி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் ஜி-20 நாடுகளின் மாநாட்டுக்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன், ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பிரதமர் கருத்து வெளியிடுகையில்,

‘உக்ரேன் நாட்டை ஒரு சுதந்திர நாடாக செயல்பட ரஷ்யா அனுமதிக்கும் என நான் இன்னும் நம்புகிறேன்.

உக்ரேனின் சுதந்திர விவகாரத்தில் சாதகமான போக்கை ரஷ்யா கையாண்டால், அதன் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் நீக்கப்படும். மாறாக ரஷ்யாவின் தவறான நடவடிக்கைகள் தொடருமானால், அதன் மீதான பொருளாதார தடைகள் மேலும் அதிகரிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

இதேவேளை உக்ரேன் விவகாரத்தில், ரஷ்யாவின் செயற்பாடுகளுக்கு உலக நாடுகள் தண்டனை வழங்கும் என அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.