கடந்த ஆண்டு பெப்ரவரில் கட்டி முடிக்கப்பட வேண்டிய சரவாக் முவாரா துவாங் இராணுவ முகாம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதோடு பல்வேறு பாகங்கள் நொருங்கி விழுந்து கொண்டிருக்கின்றன.
அந்த முகாம் கட்டி முடிக்க வேண்டியதற்கான கால எல்லை மூன்று முறை நீட்டிக்கப்பட்டும் அந்த ரிம214.43 மில்லியன் திட்டம் 95.7 விழுக்காடுதான் முற்றுப் பெற்றுள்ளது என்று ஏஜியின் 2010 ஆண்டு அறிக்கை கூறுகிறது.
அத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மரங்கள், சிமிட்டிக் கலவையிலான வேலைப்பாடுகள் போன்றவை சீரழியத் தொடங்கி விட்டதை கணக்காயவாளர் குழு கண்டதாக அறிக்கை கூறுகிறது.
“காணப்பட்டுள்ள குறைபாடுகள் சரிபடுத்தப்படா விட்டால் குத்தகையாளரும் நிபுணத்துவ ஆலோசகர்களும் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் குத்தகையாளர் கொன்சோர்டியம் ஜெண்டெல்லா ஹிக்மாட் செண்ட். பெஹாட் செலுத்த வேண்டிய செயல்நிறைவேற்ற பிணையான 10.72 மில்லியன் ரிங்கிட்டை செலுத்தவில்லை. ரிம200,000 மேற்பட்ட திட்டங்களுக்கு இது செலுத்தப்பட வேண்டும் என்பது நிதி அமைச்சின் விதிமுறையாகும்.
இத்திட்டத்திற்கு தற்காப்பு அமைச்சு 700 ஏக்கர் நிலத்தை சிலாங்கூர் புக்கிட் ராஜாவிலும், சரவாக் கூச்சிங்கில் 3.8 ஏக்கர் நிலத்தையும் தந்துள்ளது. அதன் மொத்த மதிப்பு ரிம230 மில்லியனாகும்.
கூச்சிங் சிறை செலவு அதிகம், ஆனால் சிறியதாகி விட்டது
சரவாக்கில் 1882 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பென்ரிஸ்ஸன் சிறைக்கு பதிலாக கூச்சிங் சிறை 2000 ஆண்டில் கட்டி முடிக்கப்பட விருந்தது. ஆனால் அது எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் முற்றுப்பெற்றது என்று ஏஜி அறிக்கை கூறுகிறது.
இதைக் கட்டுவதற்கான குத்தகை நேரடி பேச்சுவார்த்தை மூலம் WMH Holdings நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் தரக்குறைவான வேலைப்பாடு காரணமாக முதலில் கட்டப்பட்டவை இடிக்கப்பட்டு மீண்டும் கட்டுவதற்கான செலவு உட்பட இச்சிறை திட்டத்தின் மொத்த செலவு அதிர்ச்சி தரும் ரிம221.11 மில்லியன் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் செலவு ஆனபோதிலும், அதன் அளவு குறைக்கப்பட்டது. 103 கூடங்கல் 65 ஆக குறைக்கப்பட்டன. முதலில் 2,665 கைதிகள் மற்றும் பணியாளர்களுக்காக திட்டமிடப்பட்டிருந்த சிறைச்சாலை 1,366 பேருக்கு குறைக்கப்பட்டது என்று அறிக்கை கூறுகிறது.