தங்களுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா, மீண்டும் அணு ஆயுதச் சோதனையை நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.
வட கொரியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், இந்த விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் ஐ.நா.வில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வட கொரியா, இதற்குப் பதிலடியாக அணு ஆயுதப் பரிசோதனையை நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தது.
இதுகுறித்து வட கொரிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை கூறியதாவது:
அமெரிக்காவின் தூண்டுதலின் பேரிலேயே ஐரோப்பிய யூனியனும், ஜப்பானும் எங்களுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்தன.
இதுபோன்ற தீர்மானங்கள், பதற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
இந்தத் தீர்மானத்துக்குக் காரணமாக இருக்கும் அமெரிக்காவுக்கு எதிரான எங்களது படை பலத்தை, மேலும் அதிகரிப்போம்.
நாங்கள் மேலும் ஒரு ஆணு ஆயுதப் பரிசோதனை நடத்துவதை, இது போன்ற தீர்மானங்களால் தடுத்து நிறுத்திவிட முடியாது என்றார் அவர்.
பிற நாடுகளுடனான பதற்றம் அதிகரிக்கும் காலங்களில், வட கொரியா இது போன்ற மிரட்டல்களை விடுப்பது வழக்கமான ஒன்று என்று கூறப்படுகிறது. -http://www.dinamani.com