கென்யாவில், பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த முஸ்லிம் அல்லாதவர்கள் 28 பேரை, அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சோமாலியா எல்லையையொட்டி அமைந்துள்ள மண்டேரா நகரிலிருந்து 31 கி.மீ. தொலைவிலுள்ள சாலையில், தலைநகர் நைரோபி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தை பயங்கரவாதிகள் கடத்தினர். கடத்தப்பட்டபோது அந்தப் பேருந்தில் 60 பயணிகள் இருந்தனர்.
அவர்களில் முஸ்லிம் மதத்தைப் பின்பற்றாத 28 பேரை தனியாகப் பிரித்து, பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
உயிரிழந்தவர்களில் பலர், கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக நைரோபிக்குச் சென்ற அரசு ஊழியர்கள் என்றார் அந்த அதிகாரி. அல்-காய்தாவோடு தொடர்புடைய அல்-ஷபாப், கென்யாவில் அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
அண்டை நாடான சோமாலியாவில், அல்-ஷபாப் அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுப்பப்பட்டுள்ள ஆப்பிரிக்க யூனியன் படையில் கென்யா இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, கென்யாவில் இதுவரை 135 பயங்கரவாதத் தாக்குதல்களை அல்-ஷபாப் நிகழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த நாட்டின் வெஸ்ட்கேட் வணிக வளாகத்தில் அல்-ஷபாப் நிகழ்த்திய தாக்குதலில் 67 பேர் கொல்லப்பட்டனர்.
கென்யாவின் கடலோரப் பகுதியில், இந்த ஆண்டுத் தொடக்கத்தில் 90 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் அல்-ஷபாபே காரணம் என்று கூறப்படுகிறது. -http://www.dinamani.com