ஆப்கானிஸ்தானில் கைப்பந்து மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது.
அந்த நாட்டின் பக்டிகா மாகாணத்திலுள்ள கைப்பந்து மைதானத்தில் விளையாட்டுப் போட்டியைக் காண்பதற்காக கூடியிருந்த கூட்டத்தினரிடையே, பயங்கரவாதி ஒருவர் இருசக்கர வாகனத்திலிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இது, கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்டுள்ள மிகப் பயங்கரமான தாக்குதலாகும்.
காயமடைந்தோரை அதிபர்
சந்தித்தார்: இதற்கிடையே இந்தத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை, அதிபர் அஷ்ரஃப் கனி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காயமடைந்த 54 பேர், காபூலிலுள்ள சர்தார் முகமது தாவூத் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரைவில் நேட்டோ படைகள் அந்த நாட்டை விட்டு வெளியேறவுள்ள நிலையில், புதிதாக நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள அஷ்ரஃப் கனிக்கு பயங்கரவாதத்தை எதிர்கொள்வது மிகச் சவாலான பணியாக இருக்கும் என்பதை இந்தத் தாக்குதல் உணர்த்துவதாகக் கூறப்படுகிறது. -http://www.dinamani.com