நைஜீரியாவின் கனோ நகரிலுள்ள மசூதியில் நேற்று நிகழ்ந்த இரட்டைக் குண்டு வெடிப்பில் 200 பேர் பலியாகியுள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மசூதிக்குள் தொழுகைக்காக ஏராளமானோர் கூடியிருந்த நிலையில், தொழுகை தொடங்கிய பிறகு, பிற்பகல் 2 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு முறை வெடிகுண்டுகள் வெடித்ததில் 200 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அந்தப் பகுதியில் மறைந்திருந்த போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும், பொலிஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இறந்தவர்களின் சடலங்களை வெளியில் எடுத்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குண்டு வெடித்த சிறிது நேரத்தில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததாகவும், தொலைவில் இருந்து பார்க்கும்போதே இது தெரிந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.