முபாரக் நிரபராதி எனத் தீர்ப்பு

  • mubarak
    எகிப்து தலைநகர் கெய்ரோவில் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரில் சனிக்கிழமை அழைத்து வரப்பட்டபோது கையசைக்கும் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்.

எகிப்தில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்ததற்கு உடந்தையாக இருந்தது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் நிரபராதி என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முப்பது ஆண்டுகள் எகிப்தின் அதிபராகப் பதவி வகித்து வந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புரட்சி வெடித்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில், அப்பாவிகள் 850 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் அப்போதைய அதிபர் முபாரக்குக்குப் பங்கு உண்டு என்று அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு 2012-ஆம் ஆண்டு வெளியானது. அதில் முபாரக் குற்றவாளி எனத் தீர்ப்பு விதிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் இது தொடர்பான மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், மறு விசாரணைக்கு உத்தரவிட்டது. கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரலில் நீதிமன்ற மறுவிசாரணை தொடங்கியது.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் நீதிமன்ற விசாரணை முடிவடைந்த நிலையில், 1,60,000 பக்கங்கள் கொண்ட சாட்சியங்களை முழுமையாக ஆராய விசாரணை நீதிபதி கூடுதல் அவகாசம் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில், சனிக்கிழமை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், ஹோஸ்னி முபாரக் நிரபராதி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், எகிப்தின் முன்னாள் உள்துறை அமைச்சர், மூத்த ராணுவ அதிகாரிகள் ஏழு பேர் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இவர்கள் அனைவரும் நிரபராதிகள் எனக் கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கைத் தவிர, இஸ்ரேலுக்கு இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்தது தொடர்பாகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கிலிருந்தும் முபாரக் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார்.

இதே ஊழல் வழக்கில் முபாரக் மகன்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அவர்களும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர். மற்றொரு ஊழல் வழக்கில் முபாரக்குக்கு ஏற்கெனவே மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். -http://www.dinamani.com