சிரியாவின் கொபானே நகரில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்க கூட்டுப் படையினர் விமானத் தாக்குதல் நடத்தியதில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று சிரியா மனித உரிமை அமைப்பொன்று தெரிவித்தது.
துருக்கி எல்லையையொட்டிய கொபானே நகரைக் கைப்பற்றுவது ராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. செப்டம்பர் மாதம் இந்த நகரைக் கைப்பற்றுவதற்குப் படையெடுத்த ஐ.எஸ். அமைப்பு, குர்துப் படையின் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இந்நிலையில், அமெரிக்க கூட்டுப் படையினரின் விமானத் தாக்குதலையும் ஐ.எஸ். எதிர்கொள்ள வேண்டி வந்தது. தற்போது இந்த நகரத்தின் ஏறத்தாழ பாதி அளவு பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டிலும், மறு பாதி குர்துப் படையினர் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்நிலையில், கொபானே நகரில், ஐ.எஸ். நிலைகள் மீது, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையின் விமானங்கள் நேற்று நிகழ்த்திய குண்டு வீச்சில், 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.