ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம்: தடியடி–மிளகுபொடி வீச்சு

hongkongஹாங்காங், டிச.2– ஹாங்காங்கில் சுதந்திரமான முறையில் தேர்தல் நடத்த கோரி கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இப்போராட்டத்தை அடக்கும் முயற்சியில் சீன அரசு ஈடுபட்டுள்ளது. இடையில் சிறிது முடங்கி கிடந்த போராட்டம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நேற்று இரவு ஹாங்காங்கின் அரசு தலைமை அலுவலகங்கள் இருக்கும் பகுதிக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். அவர்களை தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இருந்தும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறினர். எனவே அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலையில் ஹெல்மட்டும், மிளகுபொடி வீச்சில் இருந்து தப்பிக்க குடைகளையும் எடுத்து வந்து தங்களை தற்காத்து கொண்டனர்.

இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. அதில் 11 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே போராட்டக்காரர்கள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர். தங்களை இங்கிருந்து வெளியேற்ற முடியாது என சவால் விடுத்துள்ளனர்.

-http://www.maalaimalar.com