வட கொரியத் தலைவர் பெயரை மற்றவர்கள் வைக்கக்கூடாது – அரச கட்டளை

kim
என் பெயர் எனக்கு மட்டும்தான் — வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்

வட கொரியாவில், நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னின் பெயரை வைத்துக் கொண்டுள்ள மற்றவர்கள் தங்களின் பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டே, தற்போதையத் தலைவரின் தந்தை கிம் ஜான் இல் உயிருடன் இருந்தபோதே இதற்கான உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது என தென் கொரிய ஊடங்கள் தெரிவிக்கின்றன.

புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு கிம் ஜான் உன் என்று பெயரிடக்கூடாது என்றும், ஏற்கனவே அந்தப் பெயரைக் கொண்டுள்ளவர்கள் தமது பிறப்புச் சான்றிதழ் உட்பட அனைத்து ஆவணங்களிலும் அதை மாற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அந்த ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இதன் காரணமாக எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், சுமார் 20 சதவீதமான கொரியக் குடும்பங்கள் கிம் எனும் பெயரைக் கொண்டுள்ளார்கள். அதே போல ஜாங் உன் எனும் பெயரும் அரிதானது இல்லை.

இதே போன்ற ஒரு உத்தரவு கிம் ஜாங் உன்னின் தந்தை மற்றும் தாத்தா பெயர்கள் குறித்தும் வெளியிடப்பட்டிருந்தன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. -BBC