உக்ரைனின் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள லுகான்ஸ்க் மாகாணத்தில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான புதிய ஒப்பந்தம், அந்த நாட்டு அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய பாதுகாப்பு, ஒத்துழைப்புக்கான அமைப்பு (ஓ.எஸ்.சி.இ.) திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
உக்ரைனில், அரசு தரப்பினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அறிவிக்கப்படாத சமரச ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் பாதுகாப்புப் படையினருக்கும், லுகான்ஸ்க் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
போர்முனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களை வரும் 6-ஆம் தேதி முதல் அங்கிருந்து அப்புறப்படுத்த இரு தரப்பினரும் சம்மதித்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லுகான்ஸ்க் பகுதி கிளர்ச்சித் தலைவர் இகோர் பிளாட்னிட்ஸ்கி கூறுகையில், “”உக்ரைனுடனான எல்லைப் பகுதியில், 15 முதல் 20 கி.மீ. வரை அமைதி மண்டலம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான உடன்படிக்கை சனிக்கிழமை ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மற்றொரு மாகாணமான டொனெட்ஸ்கில், உக்ரைனுடனான எல்லையை வரையறுப்பதற்கான பேச்சுவார்த்தை இரண்டாவது கட்டத்தை அடைந்துள்ளது.
-http://www.dinamani.com