மனிதர்களுக்கு இருக்கும் அதே உரிமை சிம்பன்ஸி குரங்குகளுக்குக் கிடையாது என்றும் உரிமையாளரிடமிருந்து அதனை விடுவிக்கச் சொல்ல முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
சட்டரீதியான கடமைகள் கிடையாது என்பதால், சிம்பன்ஸியை “சட்டரீதியான மனிதர்” எனக் கொள்ள முடியாது என்று நியுயார்க் மாகாண நீதிமன்றம் கூறியுள்ளது.
டாமி என்ற சிம்பன்ஸி தொடர்பான வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிம்பன்ஸிகள், மனிதர்களை ஒத்த சில குணாதிசயங்களைக்கொண்டவை; விடுதலை உட்பட அடிப்படை உரிமைகளைக் கொண்டவை என அமெரிக்காவிலுள்ள தி நான்ஹ்யூமன் ரைட்ஸ் ப்ராஜெக்ட் அமைப்பு வாதாடியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும் அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.
“சட்டத்தைப் பொறுத்தவரை, உரிமைகளையும் கடமைகளையும் நிறைவேற்றுபவர்களையே மனிதர்கள் என சட்டம் கருதுகிறது. சிம்பன்ஸிகளுக்கு என எந்தச் சட்டக் கடமைகளும் இல்லை. அவற்றின் நடவடிக்கைகளுக்கு சட்டரீதியாக அவற்றைப் பொறுப்பாக்க முடியாது” என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
மிருகங்களை மனிதர்களைப் போல நடத்தியதற்கு முன்னுதாரணம் இல்லை என்றும் சட்டரீதியான அடிப்படை ஏதும் இல்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
உரிமையாளர் மகிழ்ச்சி
சிம்பன்ஸிகளை சட்டரீதியாக மனிதர்களாகக் கருதி, விடுதலை பெறும் உரிமையை அவற்றுக்கு வழங்க வேண்டும் என நான்ஹ்யூமன் ரைட்ஸ் ப்ராஜக்ட் அமைப்பு அக்டோபர் மாதத்தில் வாதாடியது.
டாமி என்ற இந்த சிம்பன்ஸியின் உரிமையாளர் பாட்ரிக் லாவரி இந்தத் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
40 வயதாவதாக நம்பப்படும் டாமி, இதற்கு முன்பாக பார்வையாளர்களை மகிழ்விக்கும் காட்சிகளைச் செய்துவந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பாக, பேட்ரிக்கிடம் வந்து சேர்ந்தது. -BBC