அல்-காய்தா அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகளுக்கான தலைவர் அட்னான் ஷுக்ரிஜுமா, பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ராணுவம் சனிக்கிழமை கூறியது.
சவூதியில் பிறந்த அவர், நியூயார்க் சுரங்க ரயிலில் குண்டு வெடிப்பு நிகழ்த்தத் திட்டமிட்டதாக அமெரிக்காவால் தேடப்பட்டு வந்தவர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ மக்கள் தொடர்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தெற்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினப் பகுதியில் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின்போது அட்னான் ஷுக்ரிஜுமா கொல்லப்பட்டார்.
அவரது உதவியாளரும், அந்த இடத்தில் அவரைத் தங்க வைத்திருந்த நபரும் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு, அட்னான் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் டாலர்கள் (ரூ.31 கோடி) பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
-http://www.dinamani.com