அமெரிக்காவின் நியூயார்க் நகரில், மேலும் ஒரு கருப்பின இளைஞர் காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பூர்வாங்க விசாரணை மேற்கொள்ள பெருநடுவர் குழு (கிராண்ட் ஜூரி) ஒன்றை அமைக்கவிருப்பதாக மாவட்ட அரசு வழக்குரைஞர் கூறியுள்ளார்.
நியூயார்க் நகரிலுள்ள புரூக்லின் பகுதியில், அகாய் கேர்லி (28) என்ற இளைஞர் காவலர் ஒருவர் சுட்டதில் கடந்த மாதம் 20-ஆம் தேதி உயிரிழந்தார்.
சம்பவத்தின்போது அகாய் கேர்லியிடம் ஆயுதம் எதுவும் இருக்கவில்லை.
கேர்லி குற்றமற்றவர் என நியூயார்க் நகர காவல் ஆணையரே ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், அகாய் கேர்லியின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
இறுதிச் சடங்குக்கு முதல் நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில், கேர்லியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து புரூக்லின் மாவட்ட அரசு வழக்குரைஞர் கென் தாம்ஸன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
அகாய் கேர்லி மரணமடைந்தததன் உண்மைச் சூழலைத் தெரிந்து கொள்வது அவசியம்.
எனவே, இதுகுறித்து பூர்வாங்க விசாரணை மேற்கொள்வதற்காக பெருநடுவர் குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
அந்தக் குழு முழுமையாகவும் நேர்மையாகவும் விசாரணை நடத்துவதற்குத் தேவையான அனைத்து தகவல்களும் அளிக்கப்படும். அந்தத் தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
முன்னதாக, நியூயார்க் நகரில் கருப்பினத்தைச் சேர்ந்த எரிக் கார்னர் (43) என்பவரை போலீஸார் கைது செய்ய முயற்சித்தபோது, டேனியல் பன்டாலியோ என்ற காவலர் கார்னரின் கழுத்தை இறுக்கிப் பிடித்ததில் அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து பூர்வாங்க விசாரணை மேற்கொண்ட பெருநடுவர் குழு, டேனியல் பன்டாலியோ மீது நீதிமன்றத்தில் குற்ற விசாரணை தேவையில்லை என புதன்கிழமை தீர்ப்பளித்தது.
முன்னதாக, அந்த நாட்டின் ஃபெர்குஸன் நகரில் மைக்கேல் பிரெளன் (18) என்ற கருப்பின இளைஞரை கடந்த ஆகஸ்ட் மாதம் சுட்டுக் கொன்ற காவலர் மீது விசாரணை தேவையில்லை என்று பெருநடுவர் குழு தீர்ப்பளித்திருந்தது.
பெருநடுவர் குழுக்களின் இந்தத் தீர்ப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஃபெர்குஸன் நகரில் கல்வீச்சு, தீ வைப்பு, சூறையாடல் போன்ற வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.
இந்தச் சூழலில், அகாய் கேர்லியின் மரணம் குறித்து விசாரிக்க பெருநடுவர் குழு அமைக்கவிருப்பதாக அரசு வழக்குரைஞர் அறிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
மைக்கேல் பிரெளன், எரிக் கார்னர், அகாய் கர்லே மட்டுமின்றி, அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் பொம்மைத் துப்பாக்கி வைத்திருந்த 12 வயது கருப்பினச் சிறுவனும் போலீஸாரால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்தச் சம்பவங்கள், அமெரிக்க கருப்பினத்தவரை அந்த நாட்டு போலீஸார் கையாளும் விதம் குறித்த பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளன.
-http://www.dinamani.com