மாலத்தீவில் பொது விடுமுறை நீடிப்பு

கடும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள மாலத்தீவின் தலைநகர் மாலேயில் அரசு பொது விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

maldives_water
விமானம் மூலம் கொண்டுவரப்படும் நீர் பாட்டில்கள்

மாலேயில் இயங்கிவந்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலை கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் வெகுவாக சேதமடைந்தது. விமானம் மூலமும் கப்பல் மூலமும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் அனுப்பிய நீரைக் கொண்டு குடிநீர் தேவை ஈடு செய்யப்படுகிறது. மற்ற பயன்பாடுகளுக்கான நீர் தேவைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதையடுத்து அங்கே ஞாயிறு மற்றும் திங்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அந்த ஆலையை சீர் செய்யும் நடவடிக்கைகளில் பெரிய அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே தற்போது மூன்று நாட்கள் கூடுதலாக விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடல் நீரைக் குடிநீராக்கும் திறன் கொண்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்ட இந்தியக் கடற்படையின் இரண்டு கப்பல்கள் தற்போது மாலத்தீவு துறைமுகத்தில் நின்றபடி, குடிநீர் வினியோகம் செய்து வருகின்றன. விமானம் மூலமாகவும் தொடர்ந்து குடிநீர் வந்து கொண்டிருக்கிறது.

குளிப்பது, சமையல் செய்வது போன்ற அன்றாடப் பணிகளுக்காக தேவையான அளவுக்கு நீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதாக அங்கு வசிக்கும் இலங்கையரான முஹம்மத் ஜதீர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். லாரிகள் மூலமாக அங்கே நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. -BBC