உக்ரைனில் அமைதி திரும்புகிறது: அதிபர் பொரொஷன்கோ

எட்டு மாதங்களுக்குப் பிறகு உக்ரைனில் உண்மையாகவே அமைதி திரும்பும் நிலை தோன்றியுள்ளது என்று அந்நாட்டு அதிபர் பெட்ரோ பொரொஷன்கோ கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், சிட்னி நகரில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசினார். அவர் மேலும் கூறியது:

கடந்த 8 மாதங்களில், உக்ரைனில் ராணுவத்தினரின் உயிரிழப்பு இல்லாத முதல் நாள் வியாழக்கிழமைதான். இதன் முக்கியத்துவத்தைப் பிறரால் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது.

ராணுவ வீரர் உயிரிழந்தார் அல்லது காயமடைந்தார் என்ற செய்தி எதுவும் எனக்கு நேற்றிரவு வரவில்லை. ஆனால் இந்த அமைதி நிலையில் ஸ்திரமற்றத்தன்மை உள்ளது. ஆனால் அமைதி குறித்து நாம் தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுடன் உக்ரைன் ராணுவத்தினர் சண்டையிட்டு வருகின்றனர். கடந்த எட்டு மாத அளவில் இரு தரப்பிலுமாக, சுமார் 4,300 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷியா, பெலாரஸ் நாடுகளின் முன்னிலையில், உக்ரைன் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த செப்டம்பர் மாதம் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டபோதிலும், இப்போதும் சிறு அளவில் சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள லுகான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளில் சுயாட்சி அறிவிக்கப்பட்டு, அங்கு தேர்தல்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத் தக்கது. -http://www.dinamani.com