உக்ரைன் விவகாரத்தில், ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்கவும், ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
“உக்ரைன் விடுதலை ஆதரவு மசோதா’ என்ற அந்த மசாதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
மேலும், உக்ரைன் ராணுவத்துக்கு டாங்க் எதிர்ப்பு ஆயுதங்கள், வெடி பொருள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள், தளவாடங்களும், அதி நவீன ஆளில்லா விமானங்களுக்கும் வழங்கி உதவவும் அதிபருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது என அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறுகையில், “”நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவில் அதிபர் ஒபாமா கையெழுத்திடுவது குறித்து பரிசீலித்து வருகிறோம்” என்றார்.
உக்ரைன் உள்நாட்டுப் பிரச்னையில், உக்ரைன் அரசுக்கு தார்மிக ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா, அந்த நாட்டுக்கு ஆயுத உதவிகள் அளிப்பதற்குத் தயக்கம் காட்டி வருகிறது.
மேலும், ரஷியாவுக்கு அளவுக்கு அதிகமான பொருளாதார நெருக்கடி கொடுப்பதிலும் அதிபர் ஒபாமாவுக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை கூறுகையில், “”ரஷியா மீது ஒருதலைப்பட்சமாக நாம் பொருளாதார நெருக்கடி கொடுத்தால், அது எதிர்விளைவை உண்டாக்கும்” என்று கூறினார்.
எனினும், அவரது எச்சரிக்கையைப் பொருள்படுத்தாமல், ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கவும், உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிக்கவும் அதிபருக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றியுள்ளனர்.
இந்த மசோதாவால் நடைமுறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், உக்ரைன் விவகாரத்தில் ஒபாமா மேலும் உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடிக்க இந்த மசோதா நெருக்கடி கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.
இருதரப்பு நல்லுறவுக்குக் கேடு: ரஷியா
அமெரிக்க – ரஷியா இடையிலான நல்லுறவுக்கு உக்ரைன் விடுதலை ஆதரவு மசோதாவால் கேடு விளையும் என்று ரஷியா கூறியுள்ளது.
இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “”இரு தரப்பு நல்லுறவுக்கு இந்த மசோதா கேடு விளைவிக்கும்.
ரஷியா மீதிருந்த பனிப் போர் காலத்திய பயம், அமெரிக்காவில் இன்னும் சிலருக்குத் தீரவில்லை என்று கருதுகிறோம்.
அவர்கள்தான், இந்த மசோதா மூலம் பழைய பகையை மீண்டும் கிளற முயற்சிக்கிறார்கள்” என்றார்.
வரலாற்று சிறப்பு மிக்க மசோதா: உக்ரைன்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள உக்ரைன் விடுதலை ஆதரவு மசோதாவை உக்ரைன் அரசு வரவேற்றுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் எம்.பி. ஒருவர் கூறுகையில், “”உக்ரைனுக்கு ஆயுதங்களும், தளவாடங்களும் வழங்குவதற்காக அமெரிக்க நாடாளுமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதாவை நிறைவேற்றியுள்ளது” என்றார்.
ரஷிய உதவியுடன் சண்டையிடும் கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள, ஆயுத உதவிகளை அளிக்குமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் நீண்ட காலமாக கோரி வந்தது.
-http://www.dinamani.com