சுற்றுச்சூழல் ஒப்பந்தம் – நம்பிக்கையும், விமர்சனமும்

பெருவின் தலைநகர் லிமாவில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற விவாதங்களுக்குப் பிறகு காலநிலை மாற்றம் குறித்து எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வந்துள்ளன.

emission
கடந்த 20 ஆண்டுகளாக வளரும் நாடுகள் வெளியிடும் வாயுக்களின் அளவு அதிகரித்துள்ளது

 

காலநிலை மாற்றம் குறித்து உலக அளவிலான ஒரு ஒப்பந்தத்தை அடுத்த ஆண்டு எட்ட இது முதல் படி என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கரிம வெளியீட்டு வீதத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் செல்வந்த நாடுகளே பெரும் பங்கையாற்ற வேண்டும் என்ற நிலை தொடர்வது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக இந்தியா கூறியுள்ளது.

அதேநேரம் இந்த ஒப்பந்தம் அரைவேக்காட்டுத்தனமானது என சுற்றுச்சூழல் அமைப்புக்கள் சாடியுள்ளன.

புவிப் பந்தை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியீட்டை குறைக்க இது உதவாது என்றும் அவை கூறுகின்றன.

மேலும் இப்படியானதொரு ஒப்பந்தம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றம் தொடர்பான சர்வதேச சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் என்றும் அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

இந்த ஒப்பந்தம் குறித்து தான் மிகவும் ஏமாற்றம் அடைந்ததாக உலக வன உயிர் நிதியத்தின் சமந்தா ஸ்மித் பிபிசியிடம் கூறினார்.

194 நாடுகள் கலந்து கொண்ட ஒரு மாநாட்டில் அனைவரையும் திருப்திப்படுத்தக் கூடிய ஒரு முடிவு எட்டப்படவில்லை என்றாலும் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பெருவின் சுற்றுச்சூழல் அமைச்சர் மேனுவேல் புல்கர் விடால் தெரிவித்தார்.

இந்த காலநிலை மாநாடு நடப்பதற்கு முன்பாக சீனாவும், அமெரிக்காவும் தங்கள் வாயு வெளியீட்டைப் பெருமளவு குறைக்கப் போவதாக ஒரு அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டிருந்தன.

எனவே சீனா இந்த மாநாட்டில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் இம்மாநாட்டில் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது அமெரிக்கா முன்வைத்த பல யோசனைகளை சீனா எதிர்த்தது. -BBC